×
Saravana Stores

கடந்த வாரம் நடந்த முகாமில் 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய நாளை, நாளை மறுதினம் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய 6,85,513 பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், 2வது கட்டமாக நாளை, நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், நவம்பர் 16ம் தேதி, 17ம் தேதி 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழக மக்கள் ஆர்வத்துடன் சிறப்பு முகாமில் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாள் சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதும் 4,42,035 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க 44,128 பேரும், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்ற அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்ற அல்லது நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய 1,98,931 பேரும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்க 419 பேர் என மொத்தம் 6,85,513 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், 2வது கட்ட சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர். இந்த சிறப்பு முகாமில் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேல் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோன்று பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் விண்ணப்பம் பெறப்படும்.

சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வாக்குச்சாவடி அலுவலகர்கள் சென்று, அவர்கள் கொடுத்த தகவல் உண்மையாக இருக்கிறதா என்பதை சோதனை செய்வார்கள். அதன்பிறகு அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.

The post கடந்த வாரம் நடந்த முகாமில் 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய நாளை, நாளை மறுதினம் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 2 நாள் நடந்த முகாமில்...