குளித்தலை, நவ.22: ஓசூரில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சங்க அவசர பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த 20ம் தேதி ஓசூர் நீதிமன்றம் அருகே கொடூரமான முறையில் வக்கீலை வெட்டிய செயலை குளித்தலை வக்கீல் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலில் ஈடுபட்ட நபர் மற்றும் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்தும் வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்பட மூன்று தீர்மானங்களுக்கு ஆதரவாக குளித்தலையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இரண்டு நாட்கள் (நவ.21, 22) நீதிமன்ற பணியை புறக்கணிப்பது என்றும், 21ம் தேதி காலை நீதிமன்றம் வளாகம் வெளிப்பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு, அதன்படி நேற்று குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல் சங்கத்தினர் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது தலைமை வகித்தார். மூத்த வக்கீல்கள் பாலன், காஜா மொகிதீன், சங்க செயலாளர் நாகராஜன் உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
The post ஓசூரில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் குளித்தலையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.