நியூசியிடம் இழந்த பெருமையை ஆஸியிடம் மீட்குமா இந்தியா: முதல் டெஸ்ட் அணி விவரம்

பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று பெர்த் நகரில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, தனது மனைவியின் 2வது மகப்பேறுக்காக விடுப்பு எடுத்துள்ளார். எனவே பும்ரா முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வழி நடத்த உள்ளார். பார்டர்-கவாஸ்கர் தொடர்களில் கடந்த சில தொடர்களாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் இந்தியாவில் 2, ஆஸியில் 2 என கடைசியாக நடந்த 4 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது.

அதிலும் தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஆஸி தோற்காத பிரிஸ்பேனிலும் 2020/21 தொடரில் இந்தியா வென்றது. அப்போது வெற்றிக்கு காரணமான கேப்டன் ரகானே, தடுப்புச் சுவர் புஜாரா, ஹனுமா விகாரி, மாயங்க் அகர்வால், அறிமுகமான டெஸ்ட்டில் அசத்திய நடராஜன், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இல்லை. எனினும் சமீபத்தில் நியூசிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன அவலத்தில் இருந்து மீள வேண்டிய இக்கட்டில் இந்தியா இருக்கிது. அதனால் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் ‘ஆட’ வேண்டிய கட்டாயத்தில் இருப்பது இந்தியாவுக்கு பலன் தரலாம்.

சுழல்கள் அஷ்வின், ஜடேஜா என பந்து வீச்சாளர்களின் திறமை நியூசி தொடரிலும் அதி அற்புதமாக தான் இருந்தது. ஆஸியில் விளையாடி அனுபவம் உள்ள சிராஜ், பும்ரா ஆகியோருடன் இன்னொரு வேகம் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக உள்ளார். அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடர்ந்து இந்தியாவிடம் தோற்கும் நிலையை மாற்ற வேண்டிய நெருக்கடியில் பேட் கம்மின்ஸ் தலைமயைிலான ஆஸி அணியும் உள்ளது. ஸ்மித், கவாஜா, லபுஷேன், அலெக்ஸ், மார்ஷ், இங்லீஸ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தும் வாய்ப்பு அதிகம்.

கூடவே, லயன், ஹசல்வுட், மிட்செல், போலண்ட் ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டவும், வழக்கம் போல் இந்தியர்களுக்கு காயம் ஏற்படுத்தவும் காத்திருக்கின்றனர். எப்படி இருந்தாலும் இந்த தொடரில் வெல்வதின் மூலம் நியூசியிடம் இழந்த பெருமையை இந்தியா மீட்பதுடன், ஐசிசி உலக கோப்பை பைனலுக்கு மீண்டும் முன்னேறும் வாய்ப்பையும் பெறலாம்.

* பார்டர் கவாஸ்கர் கோப்பை
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 1947/48ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர்கள் நடக்கின்றன. தொடர்ந்து 12 தொடர்கள் நடைபெற்ற பின்னர் 1996/97ம் ஆண்டு முதல், இந்த அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் முன்னாள் கேப்டன்களான ஆலன் பார்டர்(ஆஸி), சுனில் கவாஸ்கர்(இந்தியா) பெயரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடர் என மாற்றப்பட்டது.

முதல் டெஸ்ட் அணி விவரம்
* ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலெக்ஸ் கேரி, இங்லீஸ்(விக்கெட் கீப்பர்கள்), லபுஷேன், ஸ்மித், கவாஜா(பேட்ஸ்மேன்கள்), மிட்செல் மார்ஷ், மெக்சுவீனி(ஆல் ரவுண்டர்கள்), போலண்ட், லயன், மிட்செல் ஸ்டார்க், ஹசல்வுட்(பந்து வீச்சாளர்கள்)

* இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா(கேப்டன்), ராகுல், ரிஷப், ஜூரல்(விக்கெட் கீப்பர்கள்) அபிமன்யூ ஈஸ்வரன், கோஹ்லி, ஜெய்ஸ்வால், சுப்மன், சர்பராஸ் கான்(பேட்ஸ்மேன்கள்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஜடேஜா(ஆல் ரவுண்டர்கள்), ஆகாஷ் தீப், சிராஜ், பிரசித், ஹர்சித் ராணா(பந்து வீச்சாளர்கள்), ரோகித் சர்மா(விடுப்பு)

* சாம்பியன் பைனல் வாய்ப்பு எப்படி?
தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களில் அதிக வெற்றி பெறும் 2 அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதும். இதுவரை 2021, 2023ம் ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டி பைனல்களிலும் இந்தியா விளையாடி 2வது இடத்தை பிடித்தது.

இப்போதும் 3வது தடவையாக பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பில் இந்தியா நீடிக்கிறது. புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் ஆஸி முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. ஆஸியுடன் விளையாடும் 5 டெஸ்ட்களில், 4ல் வென்றால் மட்டுமே இந்தியா பைனலுக்கு முன்னேற முடியும். இல்லாவிட்டால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள், இந்தியாவின் பைனல் வாய்ப்பை முடிவு செய்யும்.

நேருக்கு நேர்
* இதுவரை 107 டெஸ்ட் ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் களம் கண்டுவுள்ளன.

* அவற்றில் ஆஸி 45 ஆட்டங்களிலும், இந்தியா 32 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன.

* கூடவே 29 ஆட்டங்களும் சமனில் முடிந்துள்ளன.

* சென்னையில் 1986ல் நடந்த முதல் டெஸ்ட், சரிநிகர் சமனில்(டை) முடிந்திருக்கிறது.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்ட் ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று உள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

* மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 டெஸ்ட்களில் ஆஸி 4-1 என்ற கணக்கிலும், இந்தியா 2-3 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.

டெஸ்ட் தொடர்களில்..
* இந்த 2 அணிகளுக்கும் இடையே 1947/48ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர்கள் நடக்கின்றன. ஆஸியில் நடந்த 5 ஆட்டங்கள் கொண்ட முதல் தொடரை ஆஸி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* இந்தியாவில் 1959/60ம் ஆண்டு நடந்த தொடரில்தான், முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

* இந்தியாவுக்கு தொடர் வெற்றி, 30ஆண்டுகளுக்கு பிறகு 1979/80ம் ஆண்டுதான் கிடைத்தது.

* இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாட ஆரம்பித்த 60 ஆண்டுகள் கழித்து தான் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை, 2018/19ம் ஆண்டு வசப்படுத்தியது.

* இரு அணிகளும் இதுவரை 29 தொடர்களில் மோதி இருக்கின்றன. அவற்றில் ஆஸி 12 தொடர்களிலும், இந்தியா 11 தொடர்களிலும் வென்று இருக்கின்றன. எஞ்சிய 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.

* இந்தியாவில் 15 தொடர்களிலும், ஆஸியில் 13 தொடர்களிலும் இரு அணிகளும் மல்லுக் கட்டியுள்ளன.

The post நியூசியிடம் இழந்த பெருமையை ஆஸியிடம் மீட்குமா இந்தியா: முதல் டெஸ்ட் அணி விவரம் appeared first on Dinakaran.

Related Stories: