ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: மண்ணை கவ்விய சீனா; இந்தியா மீண்டும் சாம்பியன்

ராஜ்கிர்: ஆசியா சாம்பியன்ஷிப் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியின் 8வது தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நவ.11ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து என ஆறு நாடுகள் பங்கேற்றன. ரவுண்டு ராபின் முறையில் நடந்த லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அடுத்த 3 இடங்களை பிடித்த சீனா , மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் அரையிறுதிகளில் களம் கண்டன.

அவற்றில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறின. தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும் சீனாவும் பலப் பரீட்சை நடத்தின. ஏற்கனவே இந்தியா லீக் சுற்று ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி இருந்தது. கூடவே நடப்பு தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத வலுவான அணியாக இந்திய பெண்கள் அணி இருந்தாலும் நேற்று இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக போராடின. முதல் பாதியில் இந்தியாவுக்கு கிடைத்த 4, சீனாவுக்கு கிடைத்த 2 பெனால்டிக் கார்னர் வாய்ப்புகள் கோலாக மாறவில்லை. ஃபீல்டு கோல்களும் விழவில்லை. அதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது.

தொடர்ந்து 2வது பாதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில், இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீராங்கனை தீபிகா கோலாக மாற்றினார். இது நடப்புத் தொடரில் அவருக்கு 10வது கோலாகும். இந்த தொடரில் அதிக கோலடித்தவர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரராக உள்ளார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றதுடன் மீண்டும் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் வென்ற இந்தியாவுக்கு தங்கம், தோற்ற சீனாவுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

The post ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: மண்ணை கவ்விய சீனா; இந்தியா மீண்டும் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: