சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 57,160-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் இந்தியாவில்தான் கலாசார ரீதியாகவும், முதலீட்டிற்கும் அதிக அளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் பவுனுக்கு ரூ.50 ஆயிரம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தங்கத்தின் விலையானது இந்தியாவில் உச்சபட்சத்தை தொட்டது. அந்த வகையில் ஒரு பவுன் 60 ஆயிரத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில நாட்களிலையே சரிய தொடங்கியது. குறிப்பாக 15 நாட்களில் ரூ.4200 என்ற அளவிற்கு குறைந்தது. எனவே இந்த விலை குறைவானது சில நாட்கள்தான் நீடிக்கும், மீண்டும் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது மீண்டும் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
அதன்படி கடந்த 18ம்தேதி பவுனுக்கு ரூ.480-ம், அதற்கு மறுநாள் (19ம்தேதி) பவுனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. இதையடுத்து, 20ம்தேதி தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிராம் ரூ.7065-க்கும், ஒரு பவுன் ரூ.56,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,0115-க்கும், ஒரு பவுன் ரூ.56,920-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது என்று நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post தங்கம் விலை 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1680 உயர்ந்தது: பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.