செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியில் உள்ள ரயில் நிலைய மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான ஊழியர்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். சென்னையில் இருந்து ரயில் மூலம் மறைமலைநகர் வரும் தொழிலாளர்களும், செங்கல்பட்டு பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களும் மறைமலைநகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி நடை மேம்பாலம் மூலம் சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் மறைமலைநகர் பகுதிக்கு வர வேண்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மறைமலைநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்பவர்களும் இந்த ரயில்வே மேம்பாலத்தை கடந்து தான் மறைமலைநகர் ரயில் நிலையம் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த நடை மேம்பாலத்தை இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது அருந்தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். பலர் மது அருந்துவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அதே இடத்தில் வீசிச் செல்வதால் நடை மேம்பாலத்தை பயன்படுத்தும் மாணவர்களும் பொதுமக்களும் அச்சத்தில் நடந்து செல்கின்றனர். மேலும் நடை மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்துவதால் குற்ற சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மறைமலைநகர் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியின்போது நடைமேம்பாலத்தில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மறைமலைநகர் பகுதியில் மது அருந்தும் கூடாரமாக மாறிய ரயில்வே மேம்பாலம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.