×
Saravana Stores

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிய மாற்றுத்திட்டம் அவசியம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. ஊரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகை மற்றும் வாகனங்களும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முதல், இரண்டாம் பீட், செக்காலை ரோடு, கழனிவாசல் ரோடு, கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே சிக்கனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர நகரின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் செக்காலை ரோடு, முதல் பீட் பகுதியில் மட்டுமே சிக்னல்கள் செயல்பட்டு வருகிறது. நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலும் காட்சி பொருளாகவே உள்ளன. செக்காலை ரோட்டில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனத்தை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் பாதசாரிகள் நடந்து செல்வது பெரும் போராட்டமாக உள்ளது. தவிர கடைகளின் முகப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நடக்க கூட இடமில்லாத நிலையே தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நெருக்கடியான நேரத்தில் கடைகளுக்கு சரக்குகளை இறக்க லாரிகள் வரக்கூடாது என தடை உள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் மினி லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி சரக்கு இறங்குவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கண்ணன் பஜார் பகுதியில் மக்கள் செல்ல வசதியில்லாமல் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கொப்புடையநாயகி அம்மன் கோவில் பகுதி, நகைக்கடை பஜார், அம்மன் சன்னதி, கல்லுகட்டி பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் கொப்படைய நாயகி அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும். ஆனால் இதனை போலீசார் கண்டு கொள்ளாததால் சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். நகைக்கடை பஜார் பகுதியில் உள்ளே நுழைய கூட முடியாத அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். செக்காலை ரோடு உள்பட நகர் பகுதியில் கனரக வாகனங்கள் வராமல் மாற்று பாதையை ஏற்படுத்த வேண்டும்.  செக்காலை ரோட்டில் டூவீலர்களை தவிர பிற வாகனங்கள் வர அனுமதிக்க கூடாது. போதிய அளவிலான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். செக்காலை ரோட்டில் உள்ள பெரும்பாலான கடைகளின் முகப்புகள் ஆக்கிரமிப்புகளில் தான் உள்ளது.இதனை நெடுஞ்சாலைத் துறையினர் கண் டுகொள்வதே கிடையாது என்றார்.

The post போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிய மாற்றுத்திட்டம் அவசியம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா? appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Karaikudi ,Second Beat ,Sekhalai Road ,Kalanivasal Road ,College Road ,Rajiv Gandhi Statue ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் சாலையோர கடைகளை...