மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. மதுரை மாவட்டம் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. அதே போல் ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன.
இந்த நிலையில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் ஒன்றிய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் வலுத்துவரும் நிலையில் சுற்றுசூழல் அனுமதி கேட்டு மாநில அரசிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்தால் தமிழ்நாடு அரசு தாமதமின்றி நிராகரிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டியை சீரழிக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார். இதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த வருகின்றனர்.
The post அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி: ஒன்றிய அரசின் செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.