×
Saravana Stores

அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளிக்கு பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

7 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பள்ளியைச் சுற்றி சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டது. இந்தப் பள்ளி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பவானி அம்மன் கோயில் எதிரே உள்ளது. இந்நிலையில் பள்ளியின் முன்பகுதி காம்பவுண்டு சுவரையொட்டி பெட்டிக்கடை, ஓட்டல்கள், பாத்திர கடைகள் ஆகியவை உள்ளன. இதில் ஒரு சில கடைகளில் மாணவர்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். எனவே அரசுப் பள்ளி முன்பு ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத் கூறுகையில், பெரியபாளையத்தில் உள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இப்பள்ளி முன்பு காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து நான் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும், கிராம சபை கூட்டத்திலும் புகார் மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி காம்பவுண்டு முன்புள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்றார்.

The post அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Periyapalayam ,Government Higher Secondary School ,Periyapalayam Panchayat ,Tandumanagar ,Rallapadi ,Athuppakkam ,Ariyapakkam ,Velappakkam ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அருகே மாட்டுத்தொழுவமாக...