திருத்தணி: கனகம்மாசத்திரம் பஜாரில் தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் மையத்தில் தடவியல் துறையினர் நேற்று ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிஷினுக்குள் வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் தப்பியதா என்பதை ஆய்வு செய்ய இன்று மும்பையில் இருந்து ஏடிஎம் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் வருவதாக வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் எச்.டி.எப்.சி வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் மின் கசிவு காரணமாக நேற்றுமுன்தினம் மாலை தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் ஏடிஎம் மிஷின் எரிந்து நாசமானது.
ரூ.10 லட்சம் பணம் ஏடிஎம் மிஷினில் வைக்கப்படிருந்தநிலையில் திடீரென்று மின்கசிவால் ஏடிஎம் மையம் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை தடயவியல் துறை அலுவலர்கள் கனகம்மாசத்திரத்தில் தீ விபத்து ஏற்பட்ட ஏடிஎம் மையத்தில் கதவு, சுவர், மினகசிவு நடைபெற்ற பகுதிகளில் தடயங்களை சேகரித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.
தீ விபத்து குறித்து வங்கி அதிகாரி கூறுகையில், கனகன்னாசத்திரம் ஏடிஎம் மிஷினில் ரூ.10 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஏடிஎம் மிஷின் வெளிப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இருப்பினும் மிஷினில் பணம் இருப்பு வைக்கப்படும் பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் என்று நினைக்கிறோம். மும்பையிலிருந்து ஏடிஎம் மிஷின் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் வந்து திறந்து பார்த்தால் மட்டுமே எதுவும் சொல்ல முடியும். நாளை (இன்று) மிஷின் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர் என்றார்.
The post தீவிபத்தில் ஏடிஎம் மையம் நாசம் மிஷினில் வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் கதி என்ன? மும்பை பொறியாளர்கள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.