* வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் அதிரடி
* துப்பாக்கி முனையில் தொழிலதிபர்களை மிரட்டி வாங்கிய பல கோடி மதிப்புள்ள நிலப்பத்திரங்கள், வங்கி ஆவணங்கள் சிக்கியது
சென்னை: என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று அதிகாலை முதல் துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் 200 போலீசார் வருவாய் துறை அதிகாரிகளுடன் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சீசிங் ராஜா சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பறித்த பல கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை பறிமுதல் ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்ட சீசிங் ராஜா(51). சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் தனது முதல் மனைவியுடன் வசித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக தனது தந்தையுடன் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.
பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் மாத தவணைகள் கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையை செய்து வந்தார். இதனால் அவர் சீசிங் ராஜா என அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். முதலில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சீசிங் ராஜா, ரவுடி படப்பை குணாவுடன் இணைந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அந்த நட்பு மூலம் கடந்த 2006ம் ஆண்டு ரமணி என்பவரை சீசிங் ராஜா வெட்டி கொலை செய்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரை வெட்டி படுகொலை செய்தார். அதே ஆண்டு ராஜமங்கலம் காவல் எல்லையில் விஜி என்பவரை வெட்டி படுகொலை செய்தார். 2010ம் ஆண்டு ஸ்கிராப் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் தனது கூட்டாளியான ஆற்காடு சுரேஷ் உடன் இணைந்து சின்னா மற்றும் தர் ஆகிய 2 வழக்கறிஞர்களை வெட்டி படுகொலை செய்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் வெங்கல் பகுதியில் இரட்டை படுகொலை வழக்குகள் என 6 கொலை வழக்குகள், மணிமங்கலம் காவல் எல்லையில் கொலை முயற்சி வழக்கு, தேனாம்பேட்டை, ஆந்திரா மாநிலம் நெல்லூர், ஆந்திரா மாநிலம் திருப்பதி, சிட்லப்பாக்கம், வேளச்சேரி ஆகிய 5 காவல் நிலையங்களில் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்ளது. 2 வழிப்பறி வழக்குகள், 1 கூட்டு கொள்ளை வழக்கு என மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடியாக சீசிங் ராஜா உருவானதும், தனக்கு என ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கினார். அதன் மூலம் பிரபல தாதா சம்பவ செந்தில் உடன் நட்பை ஏற்படுத்தி கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள பல கோடி மதிப்புள்ள மனைகள் மற்றும் நிலங்களை அடையாளம் கண்டு, அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் தனக்கு போட்டியாக உள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் மற்றும் மனைவிகளை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் 2 கார் தொழிற்சாலைகள் அமைந்த பிறகு, தனது தொழிலை அவர் பெரிய அளவில் மாற்றிக்கொண்டார். 2 கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையில் உள்ள ‘ஸ்கிராப்’ எனப்படும் இருப்பு மற்றும் எலக்ட்ரானிக் கழிவு பொருட்களை மொத்தமாக தொழில் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி டெண்டர் எடுத்து பல கோடி வருமானம் ஈட்டி வந்தார். இதற்கு தடையாக இருந்தவர்களை சீசிங் ராஜா தனது கூலிப்படையினர் உதவியுடன் படுகொலையும் செய்தும் வந்தார்.
சீசிங் ராஜாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அரசியல் கட்சி பிரமுகர்களையும் தாதா சம்பவம் செந்தில் உதவியுடன் மிரட்டி பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்களையும் பறித்து வந்தார். அதனை தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல்துறை கூலிப்படை தலைவனான சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதன் பிறகே வேளச்சேரியில் பார் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சீசிங் ராஜாவை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படையினர் ஆந்திராவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சென்ைனக்கு அழைத்து வந்த போது, பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்ற இடத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது, அடையார் இன்ஸ்பெக்டர் இளங்கனி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு சீசிங் ராஜாவை சுட்டு கொன்றார்.
இதற்கிடையே சீசிங் ராஜாவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று தாம்பரம் காவல்துறை ஆணையரிடம் அபின் தினேஷை சந்தித்து புகார் அளித்தனர். அதேநேரம் சென்னை பெருநகர காவல்துறையை போன்று, குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தாம்பரம் மாநகர காவல்துறை முடிவு செய்தது. அதனை தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், உத்தரவுப்படி பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200 காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் கூலிப்படை தலைவனும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவுக்கு ெசாந்தமான வீடு மற்றும் உறவினர்கள் இடங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் தனது முதல் மனைவி ஜானகி(42) வசித்து வரும் வீடு, இரண்டாவது மனைவி ஜான்சி வீடு, மூன்றாவது மனைவி வனித்ரா வீடு, கோவிலம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் அவரது கள்ளக்காதலி வீடு, சீசிங் ராஜாவின் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமான வேலையூர், மம்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகள் என மொத்தம் 14 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக முதல் மனைவி வசித்து வரும் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் உள்ள வீட்டில் உதவி கமிஷனர் வைஷ்ணவி தலைமையிலான போலீசார் வருமாய் துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துப்பத்திரங்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான முக்கிய தகவல்கள், விற்பனை செய்யப்படாத நில வரைப்படங்கள், தனது மகள் சீர்த்தனா பிரியா மற்றும் மகன் தனுஷ் மீது பல இடங்களில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மற்ற 13 இடங்களிலும் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்துப்பத்திரங்கள் பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளுடன் போலீசார் சீசிங் ராஜா மனைவிகள், கள்ளக்காதலிகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருன்றனர். என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலங்களை பறித்த விவகாரம்… என்கவுன்டரில் கொல்லப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் திடீர் சோதனை appeared first on Dinakaran.