டெல்லி: டெல்லியில் 3வது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு (AQI) 488 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை ஏற்பட்ட புகை மூட்டத்தால் பார்வைத்திறனை 400 மீட்டராகக் குறைத்தது, மேலும் அது பகலில் நீடிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. டெல்லியின் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாச பிரச்சினைகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அபாயகரமான காற்று மாசு கொண்ட டெல்லி, இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி.யுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் வலைதள பதிவில்;
டெல்லி அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. இங்கு காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது மற்றும் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமான டாக்காவை விட சுமார் ஐந்து மடங்கு மோசமானது. பல ஆண்டுகளாக இந்த கொடுங்கனவை நாம் எதிர்கொண்டு வந்தாலும் நமது அரசு அது பற்றி ஏன் எதையும் செய்யவில்லை என்பது மனசாட்சிக்கு விரோதமானது.
2015-ம் ஆண்டு முதல் எம்.பி.க்கள் உட்பட வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக காற்றுத் தர வட்ட மேசை கூட்டங்களை நடத்தி வருகிறேன், ஆனால் எதுவும் மாறாததாலும், யாரும் கவலைப்படாததாலும் கடந்த ஆண்டு கைவிட்டேன். இந்த நகரம் அடிப்படையில் நவம்பர் முதல் ஜனவரி வரை வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடுகிறது. அது நாட்டின் தலைநகராகவே இருக்க வேண்டுமா..? என அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அபாயகரமான காற்று மாசு; டெல்லி, இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா..? சசி தரூர் கேள்வி appeared first on Dinakaran.