இந்தியாவில் சைபர் தாக்குதல் குறித்து தெரியாதவர்கள் யாரும் இல்லை. இன்றைய காலத்தில் இணையம் என்பது நம்முடைய அங்கமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சட்டென்று வேண்டாமென்று புறந்தள்ளிவிட்டு போக முடியாது. டிஜிட்டல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் இணையத்தை உபயோகிக்காமல் இருப்பது சாத்தியமற்றது. தொழில்நுட்பம் வளர, வளர மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் இணைய அடிப்படையிலான பிரச்னைகளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படத்தில் காண்பதுபோல் நான்கைந்து முறை கம்யூட்டர் கீ போர்டை தட்டிவிட்டு என்டர் பட்டனை தட்டியவுடன் எல்லாம் ஹேக் செய்துவிட முடியாது. படிப்படியாக சில ப்ராசஸ் செய்த பிறகுதான் ஹேக் செய்ய முடியும்.
முதலில் செல்போனை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர் எப்போது வேண்டுமானாலும் இயக்கும் அளவிற்கு மாற்றி விடுகின்றனர். இதனால் செல்போனில் உள்ள தகவல்களை சேகரிக்கவும், அழிக்கவும் செய்கின்றனர். இவை செல்போன் முதல் கணினி, லேப்-டாப், வெப்சர்வர், டேட்டாபேஸ் என அனைத்திலும் நடக்கின்றது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நூதன முறையில் மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது. வங்கி அதிகாரி பேசுகிறேன் ஏடிஎம் பின் நம்பர், ஓடிபி எண் கூறவும் எனக்கூறி பணத்தை பறித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக பண தேவைக்கு செல்போனில் உள்ள செயலி மூலம் கடன் பெற்றுக் கொள்கின்றன. அப்போது அவர்கள் வாங்கிய கடனை திருப்பி கட்டியவுடன், பணம் வரவில்லை மீண்டும் பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். பின்னர் அவர்களுடைய போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி பணத்தை பறித்து கொண்டு இருக்கின்றனர்.
இதேபோல் மக்களின் தொலைபேசிக்கு வரும் குறுந்தகவலில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக ஒரு வெளிநாட்டு தொலைபேசி எண் மூலமாக மர்மநபர் தொடர்பு கொண்டு, பகுதிநேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி பொதுமக்களை நம்ப வைத்து விடுகின்றனர். பின்னர் அவர்களுக்கு டாஸ்க் முடிக்க முடிக்க அவரது கணக்கில் பணம் கிரெடிட் ஆகி இருப்பதை காட்டுகிறது. பின்னர் சம்பாதித்த பணத்தை அவர்கள் எடுக்க முயற்சி செய்யும்போது, பணம் எடுக்க ஒரு குறியீடு வேண்டும், அதற்கு நீங்கள் பணம் கொடுத்தால்தான் குறியீடு கிடைக்கும் என்று கூறுவார்கள். இதை நம்பி பொதுமக்களும் பணத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பி ஏமாந்து விடுகின்றனர். இதில் மெத்த படித்தவர்கள் முதல் அதிகாரிகள் கூட ஏமாறிவருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுமட்டுமில்லாமல் கஸ்டம்ஸ் அதிகாரி, சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறியும் மிரட்டி பணம் பறிக்கின்றனர். டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறியும் பணமோசடி செய்கின்றனர். இந்நிலையில் தற்ேபாது இணையவழி மோசடிக்காரர்கள் புதிய யுக்தியை கடைபிடித்து வருகின்றனர். அதாவது குறுகிய காலத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என இணையதளத்தில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இதனை உண்மை என்று நம்பி, அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவர்களை வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து பங்குசந்தையில் எப்படி சம்பாதிப்பது
என்பது குறித்த நுணுக்கங்களை வழங்கி மக்களை மயக்குகின்றனர். இதனை நம்பி பொதுமக்களும், மர்ம நபர் அனுப்பிய லிங்கில் கணக்கு தொடங்கி, அதில் முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் புதிதாக ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் டிரேடிங் செய்து லாபம் பெறலாம் என மோசடி கும்பல் களம் இறங்கி உள்ளது. பங்குசந்தையில் படித்து, தெரிந்து கொண்டவர்களே பணத்தை இழந்து வருகின்றனர். யார் என்று தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்கள், விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்து வருவது தொடர் கதையாக உள்ளது.
அந்த வகையில் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்துள்ளனர். எனவே இனிமேலாவது மோசடி நபர்களிடம் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியா முழுவதும் லோன்ஆப், பங்குசந்தை, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என தினமும் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது. அதில் புதுச்சேரிக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தாண்டு மட்டும் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு இதுவரை 2,965 புகார்கள் வந்துள்ளன. இதில் 125 புகார்கள் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 125 வழக்கில் சுமார் ரூ.40 கோடி வரை பொதுமக்கள் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். மேலும் ₹10 கோடி வரை மோசடி கும்பலிடம் இருந்து பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். தொடர்ந்து சைபர் குற்றங்களை பற்றி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம், பொதுமக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post புதுவையில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி நடப்பாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு: இணையவழி மோசடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் appeared first on Dinakaran.