×
Saravana Stores

ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சியா? காங்கிரஸ் எம்எல்ஏவிடம் ரூ.100 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி ரூ.1000 கோடி ஒதுக்கிவுள்ளதாகவும் தங்கள் கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏகளிடம் பாஜ தலைவர்கள் பேரம் பேசியுள்ளதாக மண்டியா தொகுதி பேரவை உறுப்பினர் காணிகா ரவி கூறியுள்ளார். இது இரு கட்சி தலைவர்கள் இடையில் வார்த்தை போராக மாறியுள்ளது. மாநில முதல்வர் சித்தராமையா மீது நில விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த நாள் முதல், விரைவில் முதல்வர் சித்தராமையா பதவி விலகுவார், காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்ற கருத்தை ஒன்றிய பாஜ அமைச்சர்கள், மாநில பாஜ தலைவர்கள் தினமும் கூறி வருகிறார்கள். இதனிடையில் கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சித்தராமையா, எனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜ ரூ.1,000 கோடி ஒதுக்கி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏகளுக்கு தலா ரூ.50 கோடி என்ற வகையில் விலை பேசி வருகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் மண்டியா தொகுதி காங்கிரஸ் பேரவை உறுப்பினர் காணிக ரவிகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை பாஜவில் சேரும்படி வலியுறுத்தியதுடன் ரூ.50 கோடி கொடுப்பதாக பேரம் பேசினர். நான் ஒப்பு கொள்ளவில்லை. தற்போது கித்தூர் தொகுதி பேரவை உறுப்பினர் பாபாசாஹப் டி.பாட்டீல் மற்றும் சிக்கமகளூரு தொகுதி பேரவை உறுப்பினர் எச்.டி.தம்மய்யா ஆகியோரை பாஜவில் இணையும்படி வலியுறுத்தியுள்ளதுடன் தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் 50 காங்கிரஸ் எம்எல்ஏகளை விலை கொடுத்து வாங்குவதுடன் 30 பேரை அமைச்சரவையில் சேர்த்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் எம்எல்ஏகளை அழைத்து செல்ல விமானம், தங்க வைக்க ரிசார்ட் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாஜவின் சதி தொடர்பாக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், விரைவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கொடுப்பதாகவும் காணிக ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிகுமாரின் பகிரங்க குற்றச்சாட்டு மீண்டும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சியா? காங்கிரஸ் எம்எல்ஏவிடம் ரூ.100 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Congress ,Bengaluru ,Mandiya ,Kanika Ravi ,Bharatiya Janata Party ,Congress government ,Karnataka ,BJP ,Operation ,Congress MLA ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசின் இலவச திட்டங்களை...