சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 4 புறப்பாடு விமானங்கள் மற்றும் 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். சிங்கப்பூரிலிருந்து நேற்று பகல் 12.40 மணிக்கு சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 12.55 மணிக்கு டாக்காவில் இருந்து வரவேண்டிய பிஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.55 மணிக்கு இலங்கையிலிருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு இலங்கையிலிருந்து வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 11.25 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பகல் 1.55 மணிக்கு டாக்கா செல்ல வேண்டிய பிஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக இந்த சர்வதேச விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், முறையான முன்னறிவிப்பு இன்றி, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
The post சிங்கப்பூர், டாக்டா, இலங்கை 8 விமானங்கள் திடீர் ரத்து: சென்னையில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.