×
Saravana Stores

குத்தகை காலம் முடிந்தால் காலி செய்யணும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மது கடையை மாற்ற வேண்டும்: டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: குத்தகை காலம் முடிந்து விட்டால் கடையை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் எத்தனை கடைகள் குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாமல் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் நேரில் ஆஜராகுமாறு டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட நீதிபதி, 2019ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன்?. இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா? ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள்?.

மக்களுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் சொந்த வருமானத்தை மட்டுமே பார்க்கிறது. இதுபோல் மீண்டும் புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதும். கடை வேண்டாம் என்று மக்கள் கூறினால் போலீசாரை வைத்து கடைகளை நடத்துவீர்களா?. அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா?. சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது. மனுதாரர் சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை. எனவே, அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மக்கள் கூறினால் அந்த கடைகளை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

The post குத்தகை காலம் முடிந்தால் காலி செய்யணும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மது கடையை மாற்ற வேண்டும்: டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : HC ,Tasmac ,CHENNAI ,Madras High Court ,Tasmac Managing Director ,Krishnagiri District ,Choolagiri ,High Court ,Dinakaran ,
× RELATED ஊழியர் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர ஆணை