திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோயில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்தவகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. சகஸ்ர தீபத்தையொட்டி கோயில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோயில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இசைநிகழ்ச்சி, நாம சங்கீர்த்தனம், பரதநாட்டியம், மங்கல இசை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.முன்னதாக உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் மாருதி காமதேனு கோசாலையினர் செய்திருந்தனர்.
The post ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு appeared first on Dinakaran.