வேலூர், 18: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. வேலூர் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அவினாஷ்(30). இவர் டிப்ளமோ இன் நர்சிங் படிப்பு முடித்து பெங்களூருவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14ம்தேதி அதிகாலை பைக்கில் வாணியம்பாடி வழியாக வேலூர் வந்து கொண்டிருந்தார். வாணியம்பாடி அடுத்த டோல்கேட் அருகில் மேம்பாலத்தில் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவினாசுக்கு 16ம் தேதி மாலை மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது பெற்றோரின் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதில் இருதயம், நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் சிஎம்சி ராணிப்பேட்டை வளாகத்துக்கும், இடது சிறுநீரகம் வேலூர் சிஎம்சிக்கும், வலது சிறுநீரகம் நாராயணி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சிக்கும் தானமாக வழங்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட உறுப்புகள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய அவினாஷின் தாய் சத்யா, சத்துணவு மைய பணியாளராகவும், சகோதரி அனு, நர்சிங் படிப்பும் முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் மூளைச்சாவு அடைந்த appeared first on Dinakaran.