- MEMU
- மதுரை ரயில்வே கோட்டாட்
- தெற்கு மாவட்டம்
- நெல்லா
- மதுரா
- மதுரை ரயில்வே கோட்டை
- தெற்கு மாவட்ட பயணிகள்
- தின மலர்
நெல்லை: மதுரையை மையமாக கொண்டு தென்மாவட்டங்களில் மெமு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் விரும்புகின்றனர். இரண்டாம் கட்ட நகரங்கள் போதிய அளவில் இணைப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், மெமு ரயில்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை பெருக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை கோட்டத்தில் கடந்த சில வாரங்களாக மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் மெமு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் சோதனை அடிப்படையில் ‘மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்’ எனப்படும் மெமு ரயிலை தீபாவளி சிறப்பு ரயிலாக மதுரை – சென்னை இடையே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்களுக்கான போக்குவரத்து எளிதாக இருக்கிறது. வாகனப் பெருக்கம் அதிகரித்து சாலை மார்க்கம் நெரிசலாகி வருவதால், மெமு ரயில் மூலம் பலரும் நகர்பகுதிகளுக்கு வந்து செல்ல முடிகிறது. இதன் அடிப்படையில், மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை என மெமு ரயில் இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பஸ் போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் பயணத்தை பொதுமக்கள் பெற முடியும்.
தென்மாவட்டங்களில் தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் பகல் நேர ரயில் போக்குவரத்து இல்லை. இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு பயணிப்பதே வாடிக்கையாக உள்ளது. பகல் நேரங்களில் பயணிகள் நெல்லையில் இருந்து மதுரைக்கோ, மதுரையில் இருந்து தேனிக்ேகா செல்ல ரயில் வசதிகள் குறிப்பிடும்படியாக இல்லை. இதனால் பகல் நேரங்களில் பஸ்களையே நம்ப வேண்டியதுள்ளது. எனவே தென்மாவட்டங்களுக்கு மெமு ரயில்கள் அவசிய தேவையாக உள்ளது.
இதுகுறித்து நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘கேரளாவில் மெமு ரயில்கள் நகரங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தென்மாவட்டங்களை பொறுத்தவரை இன்னமும் பழைய காலத்திய பாசஞ்சர் ரயில்களைத்தான் நம்பிக் கொண்டுள்ளோம். கால மாற்றத்திற்கேற்ப மெமு ரயில்கள் நமக்கு தேவை. தென்மாவட்டங்களில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சந்தைகளுக்குரிய இடங்களும். சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கான நகரங்களும் உள்ளன. அதேபோல், முருகனின் அறுபடை வீடுகளில் 3 படை வீடுகள் தென்மாவட்டங்களில் வருகின்றன.
அதேபோல், கேரளாவின் சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
முருகன், ஐயப்பன் சீசன்களில் இப்பகுதிகளில் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளனர். சிவகாசியைப் பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில் கொடிகட்டி பறக்கிறது. ராஜபாளையம் முழுவதும் நூற்பாலைகள், பஞ்சாலைகள், தென்காசியில் மரத்தொழில்கள், சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் என தொழிற்சாலைகளும், அதுசார்ந்த தொழிலாளர்களும் பகல் நேர சேவைக்கு பஸ்களையே நம்பியுள்ளனர். அதேபோன்று தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. மெமு ரயில் சேவையால் சாமானியர்களின் பணமும், நேரமும் மிச்சமாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும். எனவே மதுரை கோட்டத்தில் ெமமு ரயில்களை இயக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.
இந்நிலையில் மதுரை கோட்டத்தில் மெமு ரயில் சேவையை துவக்க வேண்டுமென ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணாவை அகில பாரதிய கிரக பஞ்சாயத்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து சோதனை அடிப்படையில் மதுரையில் 12 முன்பதிவற்ற பெட்டிகளை கொண்ட மெமு ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ரயில்களை மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
கூடல் நகரில் பணிமனை
தென்னக ரயில்வேயில் உள்ள மற்ற அனைத்து கோட்டங்களில் மெமு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் கோட்டம் உருவாவதற்கு முன்பு இந்தியாவிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட முதன்மையான கோட்டமாக மதுரை கோட்டம் இருந்தது. இன்றளவும் இங்கு மெமு ரயில்கள் இயக்கப்படாதது வேதனைக்குரியதாக உள்ளது. மேலும் மதுரை கூடல்நகரில் மிகப்பெரிய அளவில் சரக்கு கையாளும் பெட்டக வசதியும் உள்ளது. ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளும் இருக்கிறது. எனவே அங்கு மெமு பணிமனை அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய போக்குவரத்து குறைந்த வசதியில் கிடைக்கும்.
The post இரண்டாம் கட்ட நகரங்கள் இணைப்புக்கு இதுவே வழி மதுரை ரயில்வே கோட்டத்தில் மெமு ரயில்கள் இயக்கப்படுமா? தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.