×
Saravana Stores

இன்று தேசிய வலிப்பு நோய் தினம்: வலிப்பு நோய்க்கு என்ன காரணம்?

மூளை நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது வலிப்பு நோய் (காக்காய் வலிப்பு. இது இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகின்றனர். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதிலும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உண்டு. மூளை பாதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக காய்ச்சல் ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும்.கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி கடிபட்டு வாயிலிருந்து ரத்தம் வழிய, சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார்.சில நிமிடங்களில் இது சரியாகி பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு. ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால் அவருக்கு வலிப்பு நோய்’ இருக்கிறது என்று அர்த்தம்.

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு, அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால், இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது.அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு என்கிறோம்.

பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதை போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.தலையில் அடிபடுவது, பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் காசநோய்க் கட்டி, புற்றுநோய்க் கட்டி ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், நோய்த் தொற்று, மூளையில் புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ்,பரம்பரை போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக் கூடியவையே. கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால் பிரசவ காலத்தில் வலிப்பு வருவதுண்டு.சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ வருவதும் உண்டு. வலிப்பு நோய் ஏற்பட 50 சதவீதம் பேருக்குக் காரணமே தெரியாது.குழந்தை பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப்பிரசவம் தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது.

இவர்களின் ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும். என்றாலும் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம்.பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சாதாரண காய்ச்சலாக இருந்தால் கூட உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும் என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக ‘ஆரா’ என்று அழைக்கப்படும் அறிகுறிகள் தோன்றலாம். திடீர் தலைவலி, குழப்பமான மனநிலை, வியர்த்தல், காதில் மாயக் குரல் கேட்பது, மங்கலான பார்வை, நடை தடுமாற்றம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், வலிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக் கொள்வது நல்லது.வலிப்பு வந்தவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள். சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட் போன்றவற்றைத் தளர்த்தி நன்கு சுவாசிப்பதற்கு வழி செய்யுங்கள். அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். வலிப்பு வரும்போது அவருடைய கை,கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.வலிப்பு நின்று நினைவு திரும்பும்வரை அவருக்கு குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது. வாய்க்குள், பற்களுக்கு இடையில் எந்தப் பொருளையும் வைக்கக்கூடாது. வலிப்பு ஏற்படும்போது அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால்,எந்தப் பலனும் இல்லை. இதுபோல் மூக்கில் வெங்காயச் சாற்றை ஊதுவதும் கூடாது.

மாத்திரை சாப்பிடுவதை நிறுத்த கூடாது
குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமல்’ மருந்தைக் கொடுப்பது குழந்தையின் நெற்றி, மார்பு போன்ற உடல் பகுதிகளில் ஈரத்துணியை விரிப்பது அல்லது குளிரூட்டப்பட்ட அறையில் படுக்க வைப்பது ஆகிய முதலுதவிகளை உடனே செய்தால் காய்ச்சல் வலிப்பைத் தடுக்கலாம். வலிப்பு நோய் உள்ளவர்கள், இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, நீச்சலடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வாகனங்களை ஓட்டக்கூடாது. தொடர்ச்சியாக அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது. வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், கிணறு, அருவிகளில் குளிக்கவும், விளையாடவும் அனுமதிக்காதீர்கள். வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, வலிப்பு மாத்திரைகளை விட்டுவிட்டு சாப்பிடக்கூடாது.ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்தாலும், அது நினைவுக்கு வந்ததும் விட்டுப்போன மாத்திரையைச் சாப்பிட்டு விட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்த கூடாது.

The post இன்று தேசிய வலிப்பு நோய் தினம்: வலிப்பு நோய்க்கு என்ன காரணம்? appeared first on Dinakaran.

Tags : National ,Day ,India ,National Epilepsy Day ,Dinakaran ,
× RELATED தேசிய பத்திரிகை தினம் மக்களாட்சியை...