×

கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘தமிழ்நாடு’: ரூ.50,000 கோடியில் 10 லட்சம் குடும்பங்கள் பயன்; ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான திட்டங்கள்

* கிராம ஊராட்சிகளில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்ப கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* இணையதளம் வாயிலாக அரசு சேவைகள்
சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டிட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான வி.பி.டாக்ஸ் போர்ட்டல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

* கூடுதலாக இரண்டு கிராமசபை கூட்டங்கள்
2022-23ம் ஆண்டிலிருந்து கிராம சபை கூட்டங்கள் தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய இரண்டு நாட்களையும் சேர்த்து ஆண்டிற்கு மொத்தம் 6 முறை நடத்தப்படுகிறது.

* ஊராட்சிகளுக்கு நிதிவரம்பு அதிகரிப்பு
கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 லட்சம் என்பது ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் என்பது ரூ.25 லட்சமாகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என்பது ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

* மீண்டும் உத்தமர் காந்தி விருது
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது கடந்த 2006ம் ஆண்டில் மாநிலத்தில் சிறப்பாகச் செயல்புரியும் கிராம ஊராட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டு உத்தமர் காந்தி விருது அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் 2021 முதல் மீண்டும் நிறுவப்பட்டு சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சத்திற்கான ஊக்கத் தொகையுடன், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.

* ஊராட்சிகளின் சிறந்த நிதி நிர்வாகத்திற்கான தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டம்
ஊராட்சிகளுக்கான மாநில நிதி குழு மானியம் மற்றும் சொந்த வருவாய் இனங்களை பராமரிக்க ஒற்றை மைய கணக்கு மூலம் சிறந்த நிதி நிர்வாகத்தினை கிராம ஊராட்சிகளில் ஏற்படுத்தி வேலை பளுவினை குறைத்து கணக்குகளை எளிதாக பராமரித்திடும் பொருட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

* ஊரக பகுதி சுகாதார பணியாளர்கள் நலன்
2022-23ம் ஆண்டிற்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களின் நலனுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* தெருவிளக்குகள், பராமரிப்பில் தானியங்கி முறை
தெருவிளக்குகள் பராமரித்தலில் தானியங்கி முறையினை புகுத்திடும் வகையில் இண்டர்நெட் ஆப் திங்ஸ் முறையில் சோதனை முயற்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
கடந்த 2021 முதல் மூன்று ஆண்டுகளிலும் பெண்கள் 86.26 சதவீதத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் 2,95,664 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதத்தினரும் பயன் பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளிலும் ரூ.34,609.44 கோடியில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 334 குடும்பங்கள் 100 நாட்கள் வேலை செய்து பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடப்பு நான்காவது ஆண்டில் ரூ.6,359.24 கோடி ஒதுக்கீட்டில் 100 நாள் வேலைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.

* நபார்டு-ஆர்.ஐ.டி.எப் திட்டம்
நபார்டு – ஆர்.ஐ.டி.எப் திட்டத்தின் கீழ் (2021 முதல் 2024 வரை), 551 கி.மீ நீளமுள்ள 287 சாலை பணிகள் மற்றும் 342 பாலங்கள் மேற்கொள்ள ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 472 கி.மீ நீளமுள்ள 275 சாலை பணிகள் மற்றும் 185 பாலங்கள் ரூ.920 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

* ஊரக சாலைகள் மேம்பாடு
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாடு ஆகிய திட்டங்களின் கீழ் (2021 முதல் 2024 வரை), 18,899 கி.மீ நீளமுள்ள 14,262 சாலைப் பணிகள் மற்றும் 83 பாலங்கள் மேற்கொள்ள ரூ.9,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 13,733 கி.மீ நீளமுள்ள, 11,460 சாலைகள் மற்றும் 22 பாலங்கள் ரூ.5219 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

* ரூ.594 கோடியில் ஊராட்சிகளில் சிறப்புப் பணிகள்
2021-22ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டிடம், எரிவாயு தகன மேடை, சாலைகள், பாலங்கள், சிமென்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள், பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தம், சமுதாயக்கூடங்கள், மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா போன்ற மொத்தம் 154 பணிகளை நிறைவேற்றிட ரூ.594 கோடி மதிப்பீட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

* ஊரக வீடு வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின்கீழ் முந்தைய ஆட்சி காலமான 2016-17 முதல் 2019-20 வரையிலும், திராவிட மாடல் ஆட்சிகாலமான 2021-22ம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,38,139 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2016-17 முதல் 2021 மே 6ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,30,757 வீடுகள் 2021 மே 7ம் தேதி முதல் இந்தாண்டு அக்போடர் இறுதி வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.

* பெரியார் நினைவு சமத்துவபுரம்
பெரியாரின் சமூக சமத்துவ கொள்கைக்கு புத்துயிரூட்டி அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் சுதந்திர தின பொன்விழாவையொட்டி 1997ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 1997 முதல் 2001 வரையில் 145 சமத்துவபுரங்கள், 2008-11 வரையில் 93 சமத்துவபுரங்கள் என மொத்தம் 238 சமத்துவபுரங்களுக்கு ஆணை வழங்கப்பட்டு அதில் 233 சமத்துவபுரங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

மீதமுள்ள 5 சமத்துவபுரங்களில் 4 சமத்துவபுரங்களின் பணிகள் முடிக்கப்பட்ட நிலையிலும், விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியிலுள்ள 1 சமத்துவபுரம் பணிகள் முடிக்கப்படாமலும், கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத நிலையிலும் இருந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி ஆளுநரின் உரை மீதான விவாதத்தின்போது தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவ புரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உள்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவதும் முடிவுற்றது.

மேலும், இரண்டாம் கட்டமாக 2022-23ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ.67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகளும் முழுவதுமாக முடிவுபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம் கொழுவாரி சமத்துவபுரம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டு 2022 ஏப்ரல் 5ம் தேதி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலம் பேட்டை ஊராட்சியில் உள்ள கோட்டைவேங்கன்பட்டி சமத்துவபுரம் ஆகியவை முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி முதல்வரால் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

* கலைஞரின் கனவு இல்லம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஒரு லட்சம் வீடுகளும் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டுமான நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது.

* புதிய சமத்துவபுரங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஆளுநர் உரையின் மீது கடந்த 2021 ஜூன் 24ம் தேதி நடந்த விவாதத்தின் போது புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் சமத்துவபுரம் அமைப்பதற்கு போதுமான நிலம் கண்டறியப்பட்ட எட்டு மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 8 புதிய சமத்துவபுரங்கள் கட்டுவதற்கு ஆணையிடப்பட்டு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

* ஊரக பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்த்தல் 2024-25
பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-01ம் ஆண்டு வரை கட்டப்பட்ட வீடுகளை, ரூ.1954.20 கோடி மதிப்பீட்டில், 2024-25 மற்றும் 2025-26 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கும் பொருட்டு ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டன. அதன்படி, 2024-25ம் ஆண்டில், 1,00,466 வீடுகள் ரூ.832.54 கோடி மதிப்பீட்டில் ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள வீடுகளுக்கு சிறுபழுதுகள் மற்றும் பெரும்பழுதுகள் என 10,226 பழுதுகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘தமிழ்நாடு’: ரூ.50,000 கோடியில் 10 லட்சம் குடும்பங்கள் பயன்; ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான திட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,
× RELATED கனமழை காரணமாக தமிழ்நாடு,...