செங்கல்பட்டு: தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையை இளம்பெண் ஒருவர் பிரசவித்ததும் குளத்தில் வீசிக்கொன்ற சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவரது மகள் ஷகீனாபேகம் (22), காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் அதே மாநிலத்தை சேர்ந்த சுமன் (25) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். சுமனும் அசாமில் இருந்து தமிழகத்திற்கு வந்து சென்னையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் நெருக்கமாக பழகியுள்ளனர்.
ஷகீனாபேகத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்தாதை கூறி அவருடன் சுமன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஷகீனா பேகம் கர்ப்பமானார். கர்ப்பமான ஷகீனா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சுமனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக ஷகீனா பேகத்துடன் கடந்த 2 மாதமாக சுமன் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஷகீனா பேகம் விரக்தியடைந்தார். இதனையடுத்து, சுமன் திடீரென காணாமல்போனார். அவர் தமிழகத்தைவிட்டு மீண்டும் அசாமிற்கே சென்றிருக்கலாம் என நினைத்து ஷகீனாபேகமும் கம்பெனியில் விடுப்பு எடுத்துக்கொண்டு சுமனைத் தேடி அசாமிற்கு சென்றுள்ளார். ஆனால் அசாமில் எங்கு தேடியும் சுமன் கிடைக்கவில்லை. இதனால் ஷகீனாபேகம் மீண்டும் தமிழகம் வந்து பெண்கள் விடுதியில் தங்கி, அதே கம்பெனியில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். கர்ப்பம் குறித்து விடுதியில் உள்ளவர்கள் கேட்டபோதெல்லாம் ‘விரைவில் காதலனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக’ ஷகீனா பேகம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஷகீனா பேகம் வேலைக்குச் செல்லவில்லை. விடுதியில் தங்கியிருக்கும் அனைவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். மாலையில் ஷகீனாபேகத்திற்கு பிரசவ வலி வந்துள்ளது. தனியாக இருந்த அவர் மருத்துவமனைக்குச் செல்லமுடியாமல் யாருடைய துணையும் இன்றி விடுதியில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்துள்ளார். சிறிது நேரத்தில் ஷகீனாபேகத்துக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், தன்னால் முடியாத நிலையிலும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு விடுதியின் பின்னால் உள்ள குளத்தில் தூக்கி வீசியுள்ளார். குளத்தில் வீசியதில் அந்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்து உள்ளது. பின்னர் சக தோழிகள் விடுதிக்கு வந்ததும் விஷயத்தை கூறியுள்ளார்.
அவர்கள் குளத்தில் வீசப்பட்டு இறந்துபோன குழந்தை மற்றும் இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஷகீனாபேகத்திடம் புகாரை பெற்றுக்கொண்டு அவரது விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி செங்கல்பட்டு நவாப் ஜாமியா பள்ளிவாசலில் குழந்தையின் உடலை அடக்கம் செய்தனர். இதில் ஷகீனாபேகத்தை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை கர்ப்பாக்கிவிட்டு ஏமாற்றிச் சென்ற அவரது காதலன் சுமனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஷகீனாபேகத்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். பிறந்ததும் பச்சிளம் பெண் குழந்தை குளத்தில் வீசப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் விரக்தி விடுதியில் பிரசவித்த பெண் குழந்தையை குளத்தில் வீசிக்கொன்ற கொடூர இளம்பெண்: தலைமறைவான காதலனுக்கு வலை appeared first on Dinakaran.