×
Saravana Stores

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு,சிசு மரணங்கள் குறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மகப்பேறு இறப்புகள் பாதியாகக் குறைந்துள்ளதாகவும், சிசு மரணங்கள் ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் உயிரிழப்புகள் தடுக்க சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த மாதம் மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வர சிறப்பு பணிக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்புகள் மற்றும் சிசு மரணங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதமும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கின்றது.

மகப்பேறு மரண விகிதம் 2020- 21ல் 73.0, 2021-22 ல் 90.5, 2022-23 ல் 52.0 ஆகவும் இருந்த மகப்பேறு மரண விகிதம் கடந்த 2023-24 நிதியாண்டில் 45.5 என்ற அளவில் குறைந்தது, இந்த விகிதம் 2024-25 ம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் 2024 வரை 39.4 என்ற விகிதத்தில் மேலும் குறைந்துள்ளது.

குழந்தை மரண விகிதம் 2020- 21ல் 9.7, 2021-22 ல் 10.4, 2022-23 ல் 10.2 ஆகவும் இருந்த குழந்தை மரண விகிதம், கடந்த 2023-24 நிதியாண்டில் 8.2 என்ற அளவில் குறைந்தது. இந்த விகிதம் 2024-25 ம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 7.7 என்ற விகிதத்தில் மேலும் குறைந்துள்ளது. சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்புகளைக் குறைத்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு,சிசு மரணங்கள் குறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...