உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் ஒன்றிணைந்த பெண்களுக்கு மட்டுமான முகநூல் குழுவாகிய 'மகளிர் மட்டும்' பெண்கள் குழுவின் சார்பில் பசுமை சாதனையைச் சொல்லும் விதமாக “மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்' திட்டத்தை இவ்வாண்டு இந்திய சுதந்திர தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழாவின் மூலமாகச் செயல்படுத்தினார்கள்.
இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 'மகளிர் மட்டும்' குழுவின் சார்பில் 73 மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை ரெட்ஹில்ஸை அடுத்த மாபுஸ்கான்பேட்டையில் இயங்கி வரும் மனவளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான 'அன்பு மலர்' சிறப்புப் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பள்ளியின் இயக்குநரான P.செல்வராஜ், “மரம் நடு விழா'விற்கான ஏற்பாட்டைசிறப்பாகச் செய்து, முன்னுரையாற்றினார்.
விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரிய அமைச்சகத்தில் பணிபுரியும் திருமதி விஜயலக்ஷ்மி தேவராஜன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியதோடு முதல் மரக்கன்றை நட்டார். அவருடன் திருமதி மகாலக்ஷ்மி முருகேசனும்சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.விழாவில் மேலும் 28 முருங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன. மகளிர் மட்டும் குழுவின் பெயர்ப்பலகையும் பொருத்தப்பட்டது. அத்துடன் நடனம், உடற்பயிற்சி, தேசிய கீதம் என அப்பள்ளியின் சிறப்புக் குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தியது அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது. குழந்தைகள் அனைவருக்கும் குழுவின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் பொறுப்புகளை திருமதி ரோஸ், திருமதி காயத்ரி மற்றும் திருமதி சாஹிதா அக்தர் ஆகியோர் ஏற்று சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக திருமதி சாஹிதா அக்தர் நன்றிவுரையாற்றினார்கள்.மேலும் குழு உறுப்பினர் திருமதி திவ்யா ரமேஷ் தலைமையில் திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள வலிவலம் கிராமத்தில் மூன்று பள்ளிகள் மற்றும் காவல் நிலையத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.க்ளோரி விக்டர் தலைமையில் சென்னை வடபெரும்பாக்கம் அன்பு நகர் பூங்காவில் பஞ்சாயத்துதலைவர் கொடியேற்றி மரம் நட்டு தொடங்கி வைக்க 20 மரக்கன்றுகள் நடப்பட்டு “மரம் நடு விழா' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழா நிகழ்வுகளை துபாயில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ’மகளிர் மட்டும்’ குழுமத்தின் நிர்வாகிகளான திருமதி வஹிதா தீன் மற்றும் அவரது மகள் திருமதி பெனாசிர் பாத்திமா இருவரும் இணைந்து ஒருங்கிணைத்தனர்.