கோவை: கோவையில் வீடு, அலுவலகம் மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, என லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் இன்று 3வது நாளாக அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை அடுத்த துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். தொழில் அதிபரான இவர் ஓட்டல், ரியல் எஸ்டேட், லாட்டரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முக்கிய தொழில் அதிபரான இவருக்கு சொந்தமான இடங்களில் அடிக்கடி ஐடி, ஈடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம், ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, மார்ட்டின் மனைவி லீமாரோசின் அண்ணன் ஜான்பிரிட்டோவின் சிவானந்தபுரத்தில் உள்ள வீடு, சிவானந்தா காலனியில் உள்ள தங்கை அந்தோணியா வீடு என மொத்தம் 5 இடங்களில் கடந்த 14ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இன்று 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் ரூ.9 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக கூறிப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009, 2010ம் ஆண்டில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழில் அதிபர் மார்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்து நாடு முழுவதும் 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் கடந்த ஆண்டு மே மாதம் 11, 12ம் தேதிகளில் மார்ட்டின் குழுமம், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. இதில் 157 கோடி ரூபாய் அசையும் சொத்து, 299 கோடி ரூபாய் அசையா சொத்து என 456 கோடி ரூபாய்க்கான பண பரிமாற்றம் மூலமாக பெறப்பட்ட சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது.
The post மார்ட்டின் நிறுவனங்களில் 3ம் நாளாக ஈடி ரெய்டு appeared first on Dinakaran.