பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள சில கிராமங்கள் வழியாக காட்டாற்று வெள்ளம் செல்லும் இடத்தில் தரைமட்ட பாலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் சில பாலங்கள் மிகவும் தாழ்வாக இருப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போது, அந்த தரைமட்ட பாலங்கள் மூழ்கும் அபாயம் இருப்பது, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே வேதனயை உண்டாக்குகிறது. இதில், குரும்பபாளையம் கிராமத்திலிருந்து குள்ளக்காபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் காட்டாற்று வெள்ளம் செல்லும் ஓடையை கடந்து பல ஆண்டுகளுக்கு முன்பு தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகன போக்குவரத்து தொடர்ந்திருந்தது. மேலும் பல்வேறு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை என்பதால், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தொடந்திருந்தது.
ஆனால், குரும்பபாளையம் அருகே உள்ள தரைமட்ட பாலமானது, மிகவும் பள்ளமான பகுதி போன்று தென்படுகிறது. தரைமட்டத்திலிருந்து குறிப்பிட்ட அடிக்கு மேல் மட்டமாக பாலம் அமைக்கப்பட்டதால், பருவ காலங்களில் காட்டாற்று கரைபுரண்டு வரும்போது, அந்த பாலம் வெளியே தெரியாதவாறு தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த வழியாக அவ்வப்போது போக்குவரத்து தடைபடுகிறது. மேலும், தடுப்பு சுவர் இல்லாததால், நடந்து செல்வோர் அச்சமடைகின்றனர். இந்த தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயரமான பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், குரும்பபாளையம் வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலமானது அவ்வப்போது மூழ்கியது. இதையடுத்து தரைமட்ட பாலத்தில் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க தற்காலிகமாக டிரம்கள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வருங்காலங்களில் கனமழை பெய்யும்போது அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தரைமட்ட பாலம் மூழ்கும் அபாயம் இருப்பதால், போர்க்கால அடிப்படையில், குரும்பபாளையத்திலிருந்து குள்ளக்கபாளையம் செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குரும்பபாளையம் கிராமம் அருகே தரைமட்ட பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி: உயர்மட்ட பாலமாக்க கோரிக்கை appeared first on Dinakaran.