- பொது உறவுகள் திட்ட முகாம்
- ஏழாயிரம்
- வெம்பகோட்டை வட்டம்
- எழுபத்தாயிரம் கிராம
- மக்கள் தொடர்பு திட்டம்
- முகாம்
- சதுர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ரகுராமன்
- கலெக்டர்
- ஜெயசீலன்
- பொது
- உறவுகள் திட்ட முகாம்
- தின மலர்
ஏழாயிரம்பண்ணை, நவ.15: வெம்பக்கோட்டை வட்டம், ஏழாயிரம்பண்ணை கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மொத்தம் 228 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது. தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதற்காக அவர்களுக்கென்று பயிற்சி வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் கிடைக்கப்பெறாத மகளிருக்கு தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்து வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிமுத்து, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், வெம்பக்கோட்டை வட்டாட்சியர், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.