சின்னமனூர், நவ. 15: சின்னமனூர் பகுதியில் இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் அளவு வருடத்தில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நெல் நாற்றுக்களை வளர்த்து 120 நாட்களில் அறுவடை செய்ய பேருதவியாக இருப்பது தேக்கடியில் இருந்து புறப்பட்டு வரும் பெரியாற்று பாசன நீர் மிகுந்த சேவையுடன் நன்மையாக இருக்கிறது.
வருடத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்வதால் அங்கே நிரப்புகிற போது நீர்மட்டம் 120 அடியை தாண்டுகிற போது ஜூன் மாதம் முதல் தேதியில் பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் இறுதியில் முதல் போகத்திற்காக நடவு செய்யப்பட்டு நெல் மணிகளை வளர்த்து எடுத்து முதல் போகத்திற்கான அறுவடை பணிகள் துவங்கி தற்போது நிறைவடையும் தருவாயினை எட்டியுள்ளது.
சின்னமனூர் பகுதியில் வேம்படிக்களம், கருங்கட்டான்குளம் பரவு, பெருமாள் கோயில் பரவு, முத்தலாபுரம் பிரிவு பரவு, பிள்ளைகுழி மேடு பரவு, உடையகுளம் பரவு, செங்குளம் பரவு, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், எல்லப்பட்டி, துரைச்சாமிபுரம், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4000 ஏக்கருக்கு மேலாக முதல் போகத்தில் நெல் அறுவடை பணிகள் துவங்கி தற்போது தீவிரமடைந்து ஆங்காங்கே நிறைவடைந்து வருகிறது.
முதற்கட்டமாக துரைச்சாமிபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே அக்டோபர் மாதம் இறுதியில் அறுவடையை முடித்து விட்டனர். அடுத்த கட்டமாக இரண்டாம் போகத்திற்கான நெல் சாகுபடி பணிக்கு விவசாயிகள் திரும்பி உள்ளனர். முன்னதாக வயல்வெளிகளில் நெல் நாற்றுகள் வளர்த்தெடுக்க விதை நெல் மூலமாக நாற்றங்கால் பாவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post சின்னமனூர் பகுதிகளில் 2ம் போகத்திற்கு புது நெல்லு, புது நாத்து தயார்… appeared first on Dinakaran.