×
Saravana Stores

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் 1,500 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்துடன் ரூ15 கோடியில் விளையாட்டு மைதானம்: இன்று அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கர் பரப்பளவில் 1,500 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்துடன் ரூ15கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைய உள்ளதால் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என புதிய இரண்டு மாவட்டங்கள் உதயமானது. ராணிப்பேட்டை மாவட்டத்தை பிரித்த பின்பு கெல்லிஸ் சாலையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகமும், ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் மாவட்ட எஸ்.பி அலுவலகம், தொடங்கப்பட்டு மாவட்டத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் இயங்கி வந்தது.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ118 கோடி மதிப்பீட்டில் சிப்காட் பாரதி நகரில் கட்டப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கப்பட்ட பிறகு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களை திறமைகளை வெளிபடுத்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இந்த விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு சென்றும், கல்லூரிகளுக்கு சென்றும் விளையாடி வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் பொது பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோடைகால பயிற்சி முகாம், அண்ணா சைக்கிள் ரேஸ், அண்ணா மாரத்தான் போன்ற போட்டிகள் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டிகளை வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திலும், மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும், அரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும், ராணிப்பேட்டை பெல் மைதானம் போன்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளை மேற்கண்ட பள்ளி கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, வந்து இருந்தனர். இதனால் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாவட்டத்திற்கான மாவட்ட விளையாட்டு வளாக அரங்கம் ஏற்படுத்தி தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் 2023- 24ம் ஆண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கான அறிவிப்பில் புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதியதாக மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காந்தி சீரிய முயற்சியினால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த 11ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினர். மாவட்ட விளையாட்டு அரங்கமானது ரூ15 கோடி மதிப்பீட்டில் 16.06 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு விளையாட்டு வசதிகள் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைய உள்ளது. இந்த விளையாட்டு வளாகம் மும்மை – பெங்களூர் டிரங்க் ரோடு ஐ.வி.பி.எம். எதிரே அமைகிறது.

இந்த மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கால்பந்து ஆடுகளம், 400 மீட்டர் தடகளம் (8 டிராக்) வாலிபால் ஆடுகளம்-2, பேட்மிட்டன் ஆடுகளும்-2, கூடைப்பந்து ஆடுகளம்-2, கொக்கோ ஆடுகளம்-1, டென்னிஸ் ஆடுகளம்-2, 200 பேர் அமரும் திறந்தவெளி அரங்கம், 1,500 பேர் அமரக்கூடிய ஸ்டேடியம், கூட்டரங்கம்-1, விளையாட்டு வீராங்கனைகள் வீரர்களுக்கு தனித்தனியே ஆடைகள் மாற்றும் அறைகள், 550மீட்டரில் சமையல் அறையுடன் கூடிய டைனிங் ஹால், ஆண்கள்,பெண்கள் என தனி கழிவறைகள், மாஸ்டர் கேபின், அலுவலர்கள் அறை போன்ற பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் நவீன முறையில் மாவட்ட விளையாட்டு வளாகம் மைதானம் அமைய உள்ளது மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு அமைச்சர் ஆர்.காந்தி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் 1,500 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்துடன் ரூ15 கோடியில் விளையாட்டு மைதானம்: இன்று அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ranipet district ,Ranipet ,Vellore district ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல்...