சென்னை, நவ.14: பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரி, குளம், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கியும், ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது, காவல்துறை, மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களை அகற்ற முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன. அந்தவகையில் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் முதற்கட்டமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள 170 வீடுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட வனத்துறை அதிகாரி சரவணன் கூறியதாவது: பள்ளிக்கரணை பகுதியில் 1,085 ஆக்கிரமிப்பு இடங்கள் இருப்பதாக பையோ மெட்ரிக் கணக்கெடுப்பு மூலமாக கண்டறிந்தோம். அதன்படி, முதற்கட்டமாக டாக்டர் அம்பேத்கர் நகரில் 102 வீடுகளும், மகாலட்சுமி நகரில் 70 வீடுகளும் ஆக்கிரமித்துள்ளதை அடையாளம் கண்டு இந்த குடியிருப்புவாசிகளுக்கு இம்மாதம் இறுதிக்குள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மேலும் இவர்களுக்கு செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு இடம்பெயர ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல், அரசு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தவிர்த்து காமாட்சி நகர், காயிதே மில்லத் நகர், ம.பொ.சி நகர், கே.பி.கந்தன் நகர் போன்ற இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்: முதற்கட்டமாக 170 வீடுகள் மாற்று இடத்திற்கு இடம் பெயர்கிறது appeared first on Dinakaran.