×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ₹190.40 கோடியில் புதிதாக 29 திட்டப்பணிகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ₹190 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 18 கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ₹42 கோடியே 75 லட்சம் செலவில் 15 கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், அரசர்கோயில் வரதராஜபெருமாள் கோயிலில் ₹2.42 கோடி மதிப்பீட்டில் புதிய 5 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் ₹2.35 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி என பல மாவட்டங்களில் மொத்தம் ₹190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ₹2.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ₹1.54 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமைப் பொறியாளர் பெரியசாமி, இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ₹190.40 கோடியில் புதிதாக 29 திட்டப்பணிகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Endowment Department ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Chennai Chief ,Secretariat ,Tamil Nadu ,Hindu Religious Charities Department ,
× RELATED புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உண்டியலில் ₹2.40 லட்சம் காணிக்கை