திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25ம் ஆண்டு விழா; கன்னியாகுமரி கண்ணாடி பாலம் ஜனவரி 1ல் முதல்வர் திறக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடற்கரையில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம், 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை அமையப்பெற்றுள்ளது. இங்கு சென்றுவர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது. காந்தி நினைவு மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், வியூ டவர், நகர்புற கண்காட்சி திடல், நவீனமான ஸ்வதேஸ் தர்சன் பூங்கா, மீன் கண்காட்சி கூடம், தமிழன்னை பூங்கா என்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் குமரி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில், தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன. சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ஒரே பகுதியில் இருந்து காணும் வாய்ப்பு இங்கு உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி வருகின்ற சுற்றுலா பயணிகள், சுவாமி விவேகானந்தர் நினைவிடத்தை பார்வையிட்டு பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தனித்தனியே படகு போக்குவரத்து நடைபெறுகிறது. கடலில் நீர்மட்டம் தாழ்வடைவது போன்ற காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

அதன்படி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் ₹37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 77 மீட்டர் நீளம், 10 மீ அகலத்தில் இந்த பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. முக்கடலின் அழகை மக்கள் பார்க்கும் அதே வேளையில் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்டதாக கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படுகிறது.

இதற்காக திருவள்ளுவர் சிலை அருகேயும், விவேகானந்தர் பாறையிலும் கம்பிகள் ெபாருத்தப்பட்டு காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டது. அதன் மீது ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கட்டமைப்பு பாண்டிச்சேரியில் பொருத்தி பார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் தற்போது கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பாலப் பணிகள் அனைத்தையும் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜனவரி 1ம் தேதி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. அப்போது கன்னியாகுமரி வருகை தருகின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை தொடக்கி வைக்க உள்ளார். இதற்காக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25ம் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

The post திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25ம் ஆண்டு விழா; கன்னியாகுமரி கண்ணாடி பாலம் ஜனவரி 1ல் முதல்வர் திறக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: