டெல்லி: ஏர் இந்தியா – விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைவு வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இணைவைக் கொண்டு, சுமார் 5600 வாராந்திர விமானங்கள் மூலம் 90 இடங்களை இணைக்கத் திட்டம் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.
டாடாவின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுடனான முழுமையான இணைப்பிற்கு பின் விஸ்தாரா விமானம் தோஹாவிலிருந்து மும்பைக்கு அதன் முதல் விமான சேவையை துவக்கியது. ஏர் இந்தியா இணைப்புக்குபின், முதல் சர்வதேச விமானமான AI2286 உடன் செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏர் இந்தியா-விஸ்தாரா நிறுவனத்தின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு (திங்கட்கிழமை) புறப்பட்டது. AI2286 என்ற விமான குறியீட்டுடன் இயக்கப்படும் விமானம் தோஹாவில் உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை மும்பையில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவுடன் இணைக்கப்பட்ட முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.
இணைப்புக்கு பின் உள்நாட்டுத் விமானத் துறையில், டாடாவின் முதல் திட்டமிடப்பட்ட விமானம் AI2984 செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இது ஏ320 என்ற விமானம் மூலம் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் போது பயணிகள் விஸ்தாரா விமானத்தை அடையாளம் காண உதவும் வகையில், இணைப்பிற்குப் பிறகு ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களுக்கு ‘AI2XXX’ குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
டாடா குழுமத்தின் இரு பகுதியான ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவின் இணைப்பு நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. விஸ்தாரா என்பது டாடாஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியாகும். இணைப்பிற்குப் பிறகு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும்.
The post ஏர் இந்தியா – விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைவு வெற்றி..! appeared first on Dinakaran.