திண்டுக்கல்: கொடைக்கானல் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் என்பது உலகளாவிய சுற்றுலா தளமாகும். கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் கல்வி சுற்றுலாவிற்காக கேரளா மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் ஏறிச்சாலையின் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.
அந்த தனியார் விடுதியில் மாணவர்கள் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளனர். இதையடுத்து மாணவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டதால் நள்ளிரவு முதலே 30க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளித்தனர். அதில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் விடுதியில் மருத்துவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post கொடைக்கானல் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு..!! appeared first on Dinakaran.