- பிறகு நான்
- ராஜஸ்தான்
- முத்து
- சோலைமலை அய்யனார் கோவில் தெரு
- தேனி நகர்
- பி.காம்
- விவேகானந்தா கல்லூரி
- Cholavandan
- தின மலர்
தேனி : ராஜஸ்தானில் நடந்த விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.தேனி நகர் சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (35). இவர் சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தா கல்லூரியில் பிகாம் படித்து விட்டு 2010ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
ராஜஸ்தானில் உள்ள ராம்கர் ஜெய்சல்மீர் என்ற இடத்தில் ராணுவ முகாமில் நாயக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2020ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ரீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த மாதம் விடுமுறையில் தேனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு ராணுவ வீரர் முத்து வந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார். பின்னர் தேனியில் இருந்து ராஜஸ்தானில் உள்ள ராணுவ முகாமிற்கு திரும்பினார். கடந்த 10ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் ஜெய்சல்மீர் என்ற இடத்தில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக நடைபெற்ற வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு, ராணுவ மரியாதை செலுத்திய பிறகு, ராஜஸ்தான் ராணுவ முகாமில் இருந்து நேற்று மும்பை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் முத்துவின் உடலுக்கு இந்திய ராணுவம் சார்பாக கர்னல் ராஜீவன், தமிழக அரசின் சார்பாக மதுரை திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் முத்துவின் உடல் தேனியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர்.தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் தேனி பங்களாமேடு தொடங்கி மதுரை – கம்பம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று தேனி நகராட்சி மயானத்தை அடைந்தது. அங்கு அரசு சார்பில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
பின்னர் விருதுநகர் எம்சிசி தலைமை நிர்வாக அலுவலர் கர்னல் ராகேஷ் சிங் தலைமையில் ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் நேற்றிரவு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
The post ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை appeared first on Dinakaran.