×

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். தமிழக மீனவர்களை கைதுசெய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது X தல பதிவில் தெரிவித்ததாவது; எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ?. பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இன்று மீண்டும் 13 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : DTV Dhinakaran ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Chennai ,TTV Dhinakaran ,Nadu ,
× RELATED தொடரும் அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன்...