×

கூடலூர் பகுதி பால் உற்பத்தியாளர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்

*தினமும் 2,100 லிட்டர் பால் கொள்முதல்

கூடலூர் : கூடலூர் பகுதி பால் உற்பத்தியாளர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் மும்முரமாகவும், முனைப்புடனும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் நாள் ஒன்றுக்கு 2,100 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலை தரம் உயர்த்தி பால், தயிர் மோர் உள்ளிட்டவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. நீலமலை பார்மர் புரொடியூசர் கம்பெனி என்ற பெயரில் கூடலூரை அடுத்த காழம்புழா பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை நீலகிரி மாவட்டத்தில் உருவாகியுள்ள முதல் கூட்டுறவு சங்கத்தின் பால் தொழிற்சாலை என்னும் சிறப்பையும் பெற்று விளங்குகிறது.

இதுகுறித்து நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சரிவயல் சாஜி கூறியதாவது: நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் 380 பால் உற்பத்தியாளர்களை பங்குதாரர்களாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 2,100 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை போக மேலதிகமாக கிடைக்கும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

தினசரி 1500 லிட்டர் உள்ளூரில் நேரடி விற்பனை போக 600 லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு பால், தயிர் மற்றும் மோராக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தரமான சுகாதாரமான முறையில் எந்தவித கலப்படமும் இன்றி இந்தப் பால், தயிர், மோர் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 40 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடலூர் பகுதியில் வசிக்கும் பால் உற்பத்தியாளர்களே விவசாயிகளாகவும் இருந்து வருகின்றனர்.

இவர்கள் தேயிலை காப்பி, ஏலக்காய், மிளகு காய்கறி உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் பயிரிட்டு வருகின்றனர். எனவே தேயிலை வாரியம், காப்பி வாரியம், தோட்டக்கலைத்துறை ஆகியவை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயிற்சிகள், நிதி ஆதாரங்கள், விவசாயக் கருவிகள் போன்றவற்றின் மூலம் தங்களது விவசாயத்தை வளப்படுத்திக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விவசாயிகளே தங்களது விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்தல், சந்தைப்படுத்துதல், லாபம் பெறுதல் போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வழிவகைகளையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்னைகள் சவால்களை எதிர்கொண்டு சமாளித்தல், வழிகாட்டுதல் நம்பிக்கை ஏற்படுத்துதல் விவசாயிகளின் பொருளாதரத்தை மேம்படுத்துதல் இவற்றை நோக்கமாககொண்டு செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது.

இப்பகுதி விவசாயிகள் பல் உற்பத்தியில் அதிக அளவில் ஈடுபடுத்தவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சரிவயல் சாஜி தெரிவித்துள்ளார்.

The post கூடலூர் பகுதி பால் உற்பத்தியாளர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Neelamalai Farmers Producers Corporation ,Cuddalore ,Cudalur ,Neelamalai Farmers Producers Company ,Kudalur ,Dinakaran ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...