×

ஒளி பரவட்டும்..!

இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதைப் பாருங்கள்…

– ஒரு திரைப்படத்தின் பாடல் வரிகள் இவை.
இருளில் மூழ்கிக் கிடப்பது மனித இயல்பு அல்ல. அந்த இயல்புக்கு மாறாக இருளில் மூழ்கியிருப்பவர்களே, வெளிச்சத்திற்கு வாருங்கள், நல்லவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படி வாழுங்கள் என்று அழைக்கிறது இப்பாடல். இறைஞானம் பெற்ற தூதர்கள் அனைவரும் தம் வாழ்நாள் பணியாக இதனைத்தான் செய்துவந்தார்கள். இருளில் இருந்து மனிதர்களை வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டுவந்தார்கள். அறியாமை இருள், அஞ்ஞான இருள், ஆணவ இருள், இறைமறுப்பு இருள், இணைவைப்பு இருள் என எத்தனை எத்தனை இருள்கள்.! அத்தனை இருள்களையும் அகற்றி மனித வாழ்வில் இறைஞான ஒளியை ஏற்றுவதுதான் இறைத்தூதர்களின் பணியாக இருந்தது.

இறைவேதத்தை அருளிய இறைவன் அதன் நோக்கமாக எதை வலியுறுத்துகிறான் தெரியுமா?
“(முஹம்மதே) இது ஒரு வேதமாகும். இதனை உம் மீது நாம் இறக்கி அருளியுள்ளோம். மக்களை, அவர்களின் இறைவனின் உதவி கொண்டு இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டுவர வேண்டும் என்பதற்காக. (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமாகிய மேலும், வானங்கள், பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய இறைவனின் பாதையின்பால் கொண்டுவர வேண்டும்
என்பதற்காக.” (திருக்குர்ஆன் 14:1-2)இருளை மனம் வெறுக்கிறது. ஒளியை மனம் விரும்புகிறது.
இருள் துன்பம். ஒளி இன்பம்.

இருள் வரவேண்டும் என்று மனித மனம் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால், ஒளிக்காக ஏங்குகிறது. ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிந்தால் மனிதனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருள் சூழ்ந்த எதிர்காலத்தை யாராவது விரும்புவார்களா? இறைவனைப்
பற்றிய அறியாமையில் மூழ்கியிருப்பது இருள் எனில், இறைவனைப் பற்றி அறிந்துகொள்வது ஒளியாகும். இம்மையின் சொகுசுகளிலும் மன இச்சைகளிலும் மூழ்கிக்கிடப்பது இருள் எனில், மறுமை வெற்றியையும் ஈடேற்றத்தையும் கருத்தில்கொண்டு வாழ்வது ஒளியாகும்.
நல்லவை அனைத்தும் ஒளியாகவே பார்க்கப்படுகிறது. வாழ்வின் அடிப்படையே நம்பிக்கைதானே.

நம்பிக்கை ஓர் ஒளி.அடர்த்தியான வனாந்திரத்தில், கும்மிருட்டில் திக்கு திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்போது ஒரு தீப ஒளி கண்ணில் பட்டால் மனிதனின் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா?வாழ்வெனும் இருளில் வழிகாட்டும் தீபஒளியாகத்தான் இறைவேதம் திகழ்கிறது. “இறைவனிடமிருந்து பேரொளி மிக்க திருமறை உங்களிடம் வந்துள்ளது.” (குர்ஆன் 5:15)ஒளி பரவட்டும். இருள் விலகட்டும். வாசகர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“உண்மையில் (ஒளிமிக்க) இந்தக்
குர்ஆன் நேரான வழியைக் காண்பிக்
கிறது.” (அத்தியாயம் 17:9)

The post ஒளி பரவட்டும்..! appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள்