×

சிறிய மூர்த்தி, பெரிய கீர்த்தி!

கர்நாடகம் – கோகர்ணம்

கயிலை மலைக்குச் சென்று ஈசனைப் பணிந்த ராவணன், தான் தினமும் பூஜிப்பதற்காக ஆத்ம லிங்கம் ஒன்றினை அவர் தந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தன் பிரதான வசிப்பிடமான கயிலை மலையையே அசைக்க முயன்று சிறுமைபட்ட ராவணனுக்கு ஆறுதலாக ஏதேனும் அருள் புரிய வேண்டும் என்று ஏற்கெனவே கயிலைநாதன் எண்ணியிருப்பார் போலிருக்கிறது. ஆகவே அவனுடைய கோரிக்கையை ஏற்று ஆத்ம லிங்கத்தை அவனிடம் அளித்தார். ஆனால் அவனுடைய அரக்க மனதை அவர் புரிந்து கொண்டிருந்ததால், அந்த லிங்கத்தை பூமியில் வைத்தல் கூடாது, அவ்வாறு வைத்தால் அதை மீண்டும் அங்கிருந்து எடுக்க இயலாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

லிங்கம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த நிபந்தனையின் பின்னூட்டத்தை உணராமல், அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு மிகுந்த உற்சாகத்துடன் அதைக் கையில் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தன் இலங்கை தேசத்தை நோக்கிச் சென்றான் ராவணன். அதைக் கண்டு தேவர்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். ராவணன் ஏற்கெனவே வலிமை மிக்க அரக்கன். இப்போது ஆத்ம லிங்கத்தையும் எடுத்துச் சென்றானானால் அவனுடைய பராக்கிரமம் பல மடங்காகப் பெருகிவிடும். பிறகு அவனுடைய அராஜகத்தால் அகில உலகமுமே பாதிக்கப்படும் என்று அஞ்சினார்கள். அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்பிய அவர்கள், விநாயகரை சரணடைந்தார்கள்.

அவர்களுடைய கோரிக்கையை ஏற்ற அவர் ஒரு சிறுவனாக உருவெடுத்து ராவணன் முன் போய் நின்றார். அதேசமயம், இந்திரன், வருணன் மூலமாக ராவணனுக்கு இயற்கை உபாதையைப் பெருக்கச் செய்து தவிக்க விட்டார். அதனால் ராவணன் பெரிதும் துன்பமுற்றான். கூடவே, லிங்கத்தையும் கீழே வைத்துவிடக் கூடாது என்ற நிர்ப்பந்தம் வேறு. சுற்றுமுற்றும் பார்த்தான். அப்போது சிறுவனாக நின்றிருந்த விநாயகரிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து தான் திரும்ப வரும்வரை அதனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படியும், குறிப்பாக அதை பூமியில் வைத்துவிட வேண்டாம் என்றும் தன் இயல்புப்படி அதிகாரமாகவே கேட்டுக் கொண்டான். விநாயகரோ, ‘இது மிகவும் பாரமானது போலத் தெரிகிறது.

என்னால் எவ்வளவு நேரம் சுமந்திருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆகவே முடியாத பட்சத்தில் மூன்று முறை அழைப்பு விடுப்பேன். நீ வரவில்லை என்றால் கீழே வைத்து விட்டுப் போய்விடுவேன்,’ என்று கண்டிப்பாகச் சொன்னார். ராவணன் சம்மதித்துவிட்டு கோகர்ணம் நதியை நோக்கி ஓடினான்.தான் கொடுத்த வாக்குப்படி வெகுநேரம் காத்திருந்த விநாயகர் அடுத்தடுத்து மூன்று முறை குரல் கொடுத்தும் ராவணன் வராததால் லிங்கத்தை பூமியில் வைத்து விட்டார். தன் பாரம் இறக்கிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்த ராவணன் லிங்கம் பூமியில் நிலைபெற்றிருப்பது கண்டு திடுக்கிட்டான். பெருங்கோபத்துடன் ‘நான் வரும்வரை காத்திருப்பதுதானே? மூன்று முறை குரல் கொடுத்துவிட்டு உடனே கீழே வைத்து விடுவதா?’ என்று கேட்டு விநாயகர் தலையில் ஓங்கிக் குட்டினான்.

உடனே சுயரூபம் கொண்ட விநாயகர் ராவணனைப் பந்தாடினார். திகைத்துத் தடுமாறிய அவன்தான் சிவபெருமானின் மகனால் தாக்கப்படுவதை அறிந்து அவர் தாள் பணிந்து மன்னிப்பு கோரினான். விநாயகரும் ‘என் தலையில் குட்டியது போல உன் சிரசிலும் மூன்று முறை குட்டிக்கொள். அதுதான் நீ தவறை உணரும் வழி,’ என்றார். அதேபோல அவனும் செய்ய, பின்னாளில் அதுவே விநாயகர் விக்ரகம் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கமாகவும் பரவியது. ஆனாலும் நப்பாசை கொண்ட ராவணன் நிலத்தில் பதிந்துவிட்ட லிங்கத்தை எடுக்க முயற்சித்தான். இரு புறமும் பத்து, பத்து கரங்களால் அதைப் பற்றி மேலிழுக்க, அவன் கரங்கள் பற்றிய இடத்தில் பசுவின் காதுபோன்று லிங்கம் குழைந்து நெளிந்ததே தவிர, பூமியை விட்டு மேலெழும்பவே இல்லை.

தன் முயற்சியில் தோற்ற ராவணன் ஏமாற்றத்துடன் இலங்கை நோக்கிச் சென்றான்.
இவ்வாறு லிங்கம் பசுவின் காதுகளைக் கொண்ட தோற்றமுடையதாக மாறியதால், இத்தலம் கோகர்ணம் என்றே அழைக்கப்பட்டது. கோ – பசு; கர்ணம் – காது. இது கோகர்ணம் கடற்கரை அருகே அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பிரபலமான பஞ்ச சிவத் தலங்களில் ஒன்று இந்த கோகர்ணம் சிவாலயம். இந்தத் திருத்தலத்துக்கு ஆதி சங்கரர் வருகை புரிந்திருக்கிறார். ஈசனை வழிபட்ட அவர் இதே பகுதியில் ராமச்சந்திரபுரா மடம் ஒன்றை நிறுவி சைவம் தழைத்தோங்கச் செய்தார். இந்த மடம்தான் அன்று முதல் இன்றுவரை கோகர்ணம் மஹாபலேஸ்வரர் கோவிலை நிர்வகித்து வருகிறது.

இந்தக் கோயில் கிபி 345-365 ஆண்டு களில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர், இப்பணிக்குப் பொறுப்பேற்று திறம்பட அதனை நிறைவேற்றியிருக்கிறார். மாவீரன் சத்ரபதி சிவாஜி இக்கோயிலுக்கு வந்து மஹாபலேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இக்கோயில் தட்சிண காசி என்றும் பூலோக கயிலாயம் என்றும் போற்றப்படுகிறது. காசியிலுள்ள ஜோதிர்லிங்கக் கோயில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சமமானதாக புகழப்படுகிறது. கோயிலின் இறைவன், மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர் என்றெல்லாம் பக்தர்களால் பூஜிக்கப்படுகிறார். இறைவி கோகர்ணேஸ்வரி என்றும் தாமிரகௌரி என்றும் போற்றி வணங்கப்படுகிறாள்.

மஹாபலேஸ்வரர் கருவறை மிகச் சிறியது, ஆனால் கொண்ட கீர்த்தியோ பெரியது. அறைக்கு நடுவே ஒரு சதுர மேடை, அதன் மேல் வட்டமான ஆவுடை. இதன் தென்கிழக்குப் பகுதியில் ஒரு கீறல் காணப்படுகிறது. இதனை ஸ்வர்ணரேகை கொண்ட சாளக்கிராம பீடம் என்கிறார்கள். இதன் நடுவே வெள்ளை நிறத்தில் ஒரு சிறு பள்ளம் – வெறும் உள்ளங்கை அளவுதான் இருக்கும். இந்தப் பள்ளத்தின் நடுவே கொட்டைப் பாக்கு அளவுக்கு சிறு லிங்கம் ஒன்று தரிசனம் வழங்குகிறது. ஆமாம், இந்த லிங்கம்தான் மஹாபலேஸ்வரர்! இந்த லிங்கத்தைத் தொட்டு பூஜிக்கும் சலுகை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் இரு புறங்களிலும் பசுவின் காது போன்ற அமைப்பையும் பக்தி நெகிழ்ச்சியுடன் தொட்டு உணரலாம்.

கோயிலினுள் துவிபுஜ விநாயகர் பேரருள் பொழிகிறார். இவர் தலையில் யானையின் தலை போன்று இரு பக்கமும் மேடாகவும், நடுவே பள்ளமாகவும் காணப்படுகிறது. ராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமாம் இது!இந்தக் கோயிலைச் சார்ந்து 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ர கௌரி நதி, கோடி தீர்த்தம், பிரம்ம குண்ட தீர்த்தம் ஆகியவை தனிச் சிறப்பு கொண்டவை. இவற்றில் கோடி தீர்த்தம் முக்கியமானது என்பதால் இக்கோயிலுக்கு வருவோர் முதலில் இந்த தீர்த்தத்திலும் அடுத்து கடலிலும் நீராடிவிட்டு, பிண்ட தர்ப்பணக் கடமையை நிறைவேற்றி விட்டு அதன் பிறகே இறைவனை தரிசிக்கச் செல்கிறார்கள்.
இங்கே கண்டு களிக்க வேண்டிய இன்னொரு அம்சம் – கோகர்ப்ப குகை.

இக்கோயிலின் புராணம், காட்சி ரூபமாக, அற்புதமான முக பாவனைகளுடன் கூடிய பேரழகுச் சிற்பங்களாக நம்மைப் பரவசப்படுத்துகின்றன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் ஒருசேர வந்து இத்தலத்தின் மேன்மை விளங்கக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இருவரும் பாடிப் பரவசப்பட்ட திருத்தலம் இது. இதனாலேயே கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரே
திருமுறைத்தலம் என்றும் போற்றப்படுகிறது. காளிதாசர் தன் ரகுவம்சம் காவியத்தில் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஹர்ஷவர்த்தனன் நாகானந்த காவியத்திலும் இக்கோவில் இறைவனைப் போற்றி மகிழ்ந்திருக்கிறார். இவர்கள் தவிர, கபிலதேவ நாயனார், சேக்கிழார், பிரம்மன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிஷ்டர், நாகராஜன் ஆகியோரும் இறைவனைத் தொழுது மேன்மையடைந்திருக்கிறார்கள்.

நாகா கண்ணன்

எப்படிப் போவது

பெங்களூருவிலிருந்தும், மங்களூருவிலிருந்தும் பேருந்து வசதி உண்டு. சென்னையிலிருந்து ரயிலில் செல்பவர்கள் ஹூப்ளி நிலையத்தில் இறங்கி, பேருந்து அல்லது வாடகைக் கார் பிடித்துச் செல்லலாம். விமானத்தில் செல்வோர் பனாஜி நிலையத்தில் இறங்கி அங்கிருது 150 கி.மீ சாலை வழியே பயணிக்க வேண்டும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம்12; மாலை 5 முதல் 7 மணிவரையும். கோயில் தொடர்புக்கு: 08386 – 256167, 257167.

The post சிறிய மூர்த்தி, பெரிய கீர்த்தி! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்