×

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை: அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை, சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 30.8.2024 அன்று பெண் ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அந்த புகாரின் படி மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குற்றவாளியை விரைந்து கைது செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 24.9.2024 அன்று தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

பின்னர் கடந்த 1.10.2024ம் தேதி நடந்த விசாரணையின் போது வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ)க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் எதிர்தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, மத்திய புலனாய்வு துறை(சிபிஐ) விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம் என்றும், அதற்கு தமிழ்நாட்டில் பணியாற்றும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அவர்கள் தொடர்பான சுருக்கமான விபரங்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சென்னை பெருநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கை சென்னை பெருநகர காவல்துறை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளையும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெருநகர காவல்துறை செய்து வருகிறது.

The post அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CBI ,Annanagar ,Supreme Court ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம்...