×

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பால பணிக்காகசாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பால பணி காரணமாக சாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து தற்போது அண்ணா சாலையில் கட்டுமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அண்ணா சாலையில் கீழ் செல்லும் மெட்ரோ சுரங்கப்பாதையை பாதிக்காத வண்ணம் பாலத்திற்கான தூண்கள் வடிவமைக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையின் முக்கியமான திட்டம் என்பதால் 3 ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணியானது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருபகுதியாக ஜே.குமார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநில நெடுஞ்சாலைதுறையின் இணைந்து கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறது. மண் பரிசோதனை முடிக்கப்பட்டு தூண்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்கான சாலையின் நடுவே சில பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலையின் இருபுறமும் உள்ள நடைப்பாதைகள் அகற்றப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரையில் 3.2 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அண்ணா சாலையில் உள்ள நடைபாதைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒய்எம்சிஏ மைதானத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் உள்ள கிரானைட் கற்களை அகற்றும் பணியை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த இடத்தில் பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதால் 600 மீட்டர் தூரத்திற்கு ஸ்லாப் கற்களை அகற்றிப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள வடிகாலின் கான்கீரிட் மேற்பரப்பு உறுதியாக இருந்தால் அதனை அகற்றாமல் போக்குவரத்திற்காக அப்படியே வைக்கப்படும். அதேபோல் கேபிள்கள் ஏதேனும் இருந்தால் மாற்றியமைக்கப்படும். அகற்றப்படும் ஸ்லாப் கற்கள் சேமிக்கப்பட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பால பணிக்காகசாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thenampettai ,Saitappettai ,Highways Department ,CHENNAI ,Thenampet ,Saitappet ,Saidapet ,Anna Road ,Thenampet - ,Highway Department ,Dinakaran ,
× RELATED செட்டிக்குளத்தில் ரவுண்டானா அமையுமா?.. பேரிகார்டுகள் வைத்து ஒத்திகை