நன்றி குங்குமம் டாக்டர்
குளிர்காலம் வருகிறது, குளிர்காலக் காற்றில் தொற்றுநோய் பரவுவது குறித்த பயமும் நீடிக்கிறது. தொற்றுநோய்ப் பரவலே அதிகம் கேள்விப்படும் செய்தியாக இருக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுகளில் சில காது-மூக்கு-தொண்டைப் பிரச்னைகளுடன் தொடர்புடையவை. இதேபோல், குளிர் காற்று காரணமாக இந்த மாதங்களில் தொண்டை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். குளிர்கால காற்று பாக்டீரியா, தொற்றுநோய்க் கிருமிகளை அதிகம் சுமந்து வருபவை.
தொண்டை நோய்த்தொற்றுகள் என்பவை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக தொண்டை திசுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது கடினத்தன்மை. தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்று வலி, வீக்கம், சிவந்துபோதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இந்த நோய்த்தொற்றுகள் இருமல், நிறமுள்ள சளி, விழுங்குவதில் சிரமம், வறண்ட – கரகரப்பான தொண்டை, டான்சில்களில் நிணநீர் கட்டிகள், தொண்டை வலி, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
தொண்டை நோய்த்தொற்றுகளை எவ்வாறு சமாளிப்பது?
சுகாதாரமே அடிப்படை: பெரும்பாலான வைரஸ் – பருவகால நோய்த்தொற்றுகளைப் போலவே, தொண்டை நோய்த்தொற்றுகளைச் சமாளிப்பதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று தனிப்பட்ட, சமூக சுகாதாரத்தை பராமரிப்பதாகும். தேவைப்பட்ட நேரத்திலும் அடிக்கடியும் கை கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவை தொற்று பரவாமல் தவிர்ப்பதற்கான ஒரு முக்கியமான வழி.
முகக்கவசம்: பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இனிமேல் கட்டாயமல்ல. அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனால், பருவகால வைரஸ்களைத் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லதொரு நடைமுறை.
காற்றில் ஈரப்பதம் தேவை: குளிர்கால காற்று வறண்டும் ஈரப்பதம் அற்றும் இருக்கும். சுற்றுப்புறம், காற்றில் ஏற்படும் மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படும் நிலை ஒருவருக்கு இருந்தால், இது கவலைக்குரியது. வறண்ட காற்று தொண்டை நோய்த்தொற்றுகளைத் தூண்டுகிறது, தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது, இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். வீட்டில் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது ஈரப்பதத்தை அதிகரிக்கவும், சுற்றியுள்ள காற்று உலர்ந்திருப்பதைக் குறைக்கவும் இது உதவும்.
ஆவிபிடித்தல், தொண்டையை கொப்பளித்தல்: தொண்டை நோய்த்தொற்றுகள் சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம். ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டையில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். தொண்டை நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த தொண்டையில் படுமாறு கொப்பளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. உப்பு சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீர் தொண்டையில் படுமாறு கொப்பளிப்பது, தொண்டை தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தவும் இதம் தரவும் உதவும்.
நோய் எதிர்ப்புசக்தியை அதிகரியுங்கள்: குளிர்காலத்தில் பொதுவான தொண்டை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட, உடலின் நோய் எதிர்ப்புசக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் நசுக்கிய பூண்டுடன் தேன் சேர்த்து அருந்தினால் தொண்டை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு சார்ந்த பாதுகாப்பைக் கொடுக்கும். கால்சியம், துத்தநாகம், மக்னீசியம் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். இது தொற்றுநோயை சிறப்பாக எதிர்த்துப் போராடுவதற்கு உடலை மேம்படுத்தும்.
பொதுவான அறிகுறிகள் காரணமாக தொற்றுநோய்களை புறக்கணித்துவிடக் கூடாது. தொற்றுநோய்களைத் தடுக்க முயற்சிப்பதும், சமூக அளவிலான பிரச்னையாக அது மாறுவதைத் தடுப்பதும் முக்கியம். வலுவான நோய் எதிர்ப்புசக்தியைப் பெற பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருவர் பின்பற்றி வந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டிற்குள்ளேயே இருந்து மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். நோய்த்தொற்று நீண்ட காலம் நீடிப்பதாகத் தோன்றினால், விரைவில் மருத்துவரைப் பாருங்கள்.
தடுப்பு முறைகள்
தொண்டைப் புண்ணை உண்டுபண்ணக்கூடிய கிருமிகள் எளிதில் தொற்றும் தன்மைகொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு வரலாம் என்பதால் அவர்களுக்கு சில சுகாதாரமான பழக்கவழக்கங்களைச் சொல்லித்தரவேண்டும்.
1.கைகளை நன்றாக கழுவவேண்டும். குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்ணும் முன், இருமிய தும்மிய பின்.
2.அடுத்தவர் குடித்த குவளையில் பகிர்ந்து குடிக்கக்கூடாது.
3.கண்டதையும் வாயில் வைத்து சப்பக்கூடாது.
4.பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைக்காட்சியை இயக்கம் கைக்கருவியையும் கையில் எடுத்து விளையாடக்கூடாது. அதில்கூட கிருமிகள் இருக்கலாம் – முன்பு பயன்படுத்தியவருக்கு கிருமித் தொற்று இருந்தால்.
5.இருமும்போதும் தும்மும்போதும் மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி உடன் குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டும்.
6.நிறைய நீர் பருக வேண்டும்.
7.காய்கறிகள் பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி கிருமிகள் தொற்றைத் தவிர்க்கும்….
தொகுப்பு: சரஸ்
The post குளிர்கால தொண்டத் தொற்று…தடுக்க தவிர்க்க! appeared first on Dinakaran.