×
Saravana Stores

அகமெனும் அட்சயப் பாத்திரம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் யஸ்ரீ கண்ணன்

பொறுப்புணர்வு குறைந்து வருகிறதா?

சார்புநிலை ஆளுமைக் குறைபாடு – ஓர் அலசல்

‘‘இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்களே” – வாழ்க்கைத்துணை மீது, குழந்தைகள்மீது, பணியாளர்கள் மீது, சமூகத்தின் மீது என்று ஒருவர் மாற்றி ஒருவர் மேல் பொறுப்பின்மைக் கோளாறுகளைக் கண்டு அன்றாடம் சலிப்படைகிறோம்.அடிக்கடி கொதிப்படைந்து, பதட்டமும் கொள்கிறோம். மிக அடிப்படையானவற்றையே பலமுறை சொன்னாலும் யாரும் செய்வதில்லையே எனப் புலம்புகிறோம்.

உதாரணத்திற்கு, குழந்தை தொடர்ந்து தண்ணீர் பாட்டிலை மறந்து பள்ளியிலேயே வைத்து விட்டு வருகிறது, உணவுப் பாத்திரத்தை எடுத்து கழுவப் போடுவதில்லை. வெளியே சென்றவர்கள் உணவுக்கு வீட்டிற்கு வருவார்களா எனச் சொல்வதில்லை. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனில் துணி மடிக்காமல் எத்தனை நாள் ஆனாலும் அப்படியே சோஃபாவிலேயே கிடக்கும். கணவன் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணத்தைத் தாமதமாகவே கட்டுகிறார். வீட்டில் இருக்கும் மனைவி நேரத்திற்கு நல்ல உணவு சமைப்பதில்லை. வீட்டைத் தூய்மைப்படுத்துவதில்லை. நிதிநிலைக்கு பொருந்தாத ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார். இப்படிக் குட்டிக்குட்டியாய் எண்ணற்ற புகார்கள். இவற்றோடு போராடுவதிலேயே பாதிநேரம் கழிந்துவிட முக்கியமான செயல்கள் தாமதம் ஆகின்றன. சில நின்று போகின்றன.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நான் கோவைக்கு வந்தேன். கடும் தண்ணீர்ப் பஞ்சம் எங்கள் பகுதியில் நிலவியது. பள்ளிவிட்டு வந்தவுடன் இருப்பதைச் சாப்பிட்டு விடுவேன். பிறகு, ஆண்கள் ஓட்டும் பெரிய மிதிவண்டியில் பின்னிருக்கையில் கயிறு கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். இரு குடங்களிலும் பெரும்வரிசையில் நின்று பிடித்து, நானே அவற்றைத் தூக்கிப் பொருத்தி ஒட்டிக் கொண்டு வீடு வருவேன்.

ஐந்தாறு முறை தண்ணீர் பிடிப்பது தினசரி வாடிக்கை. யாரும் நினைவூட்ட மாட்டார்கள். இதில் பெருமையோ, வருத்தமோ இல்லை. இயல்பாக மகிழ்ச்சியாக செய்வோம். ஆனால், இன்று தன் வேலைகளையே செய்யாதபோது, பொதுவானவற்றைத் தாமாக எடுத்துச் செய்ய முன் வருதல் (volunteering ) எப்படி நடக்கும்? ஆகவே, தலைமுறை இடைவெளி, வளர்ப்பு முறைகளின் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகளையும் உற்று கவனிக்க வேண்டியுள்ளது.‘அந்நியன்’ திரைப்படம் சிறுசிறு பொறுப்பின்மையினால் நேர்ந்த தங்கையின் மரணம் எப்படி ஒருவரை உளவியல் சிக்கலுக்குள் தள்ளிவிடக்கூடும் என்று காட்டியது. சின்ன பிழைகள் என்று அலட்சியம் காட்டினால் நாளை அவை ஒன்று சேர்ந்து பெரும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொறுப்பின்மை ஓர் ஆளுமைக் கோளாறா? வேண்டுமென்று செய்கிறார்களா? சோம்பேறித்தனமா? மற்றவர்கள் மேல் மரியாதை இல்லையா? என்று பல கேள்விகளை எழுப்புகிறது. மனித ஆளுமைப் பண்புகளில் சிலர் சார்புநிலையர்களாக (Dependent personality) அறியப்படுகிறார்கள். இதர ஆளுமைப் பிரிவினரும் பொறுப்பற்று இருக்கிறார்கள். எனினும் சார்பு நிலையர்களில் இந்த அலட்சியப்போக்கு அதிகம் எனலாம்.

அவர்களிடம் ஏதாவது வேலையைச் சொன்னால் தவிர்ப்பார்கள் அல்லது தள்ளிப் போடுவார்கள் (Procrastination ). சில நேரம் செய்யாமல் விட்டுவிட்டு அதற்குக் காரணமாக மற்றவர்கள் மீது காரணம் (Blame shifting ) கூறுவார்கள். சிலர் காலக்கெடு (Deadlines) முடியும்வரை செய்யாமல் பொறுமையைச் சோதிப்பார்கள். வேறு வழியின்றி மற்றவர்கள் அதை மேற்கொண்டு செய்தாக வேண்டும் நிலை ஏற்படும். அதன் பிறகு அவர்கள் செய்ததை, இப்படிச் செய்திருக்கலாமே/ அப்படி ஏன் செய்யவில்லை என்று குறை கூறுவார்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமை சார்ந்து முதலில் முடிவு எடுக்கவே மிகத் தாமதம் செய்யும் இயல்பினர்.

மனித ஆளுமைப் பண்புகளின் கட்டமைப்பை (Structure ) உளவியல் முன்னோடி ஃப்ராய்ட் மூன்று பிரிவாகப் பிரிக்கிறார். 1. அடையாளம் (ID ),2.சுயம் (Ego ), மேனிலை சுயம் (Super Ego).இதில் ஐடி எனும் முதல்நிலை பிறக்கும்போது நமக்குக் கிடைத்தது. பெயர், எங்கு பிறந்தோம் இப்படி உடல் சார்ந்தவைகள்.தான் யாராக வேண்டும்? எது சரி எது தவறு எது? எனப் பிரித்தறியத் தெரியாது. வாழ்வியல் மதிப்பீடுகளோ கொள்கைகளோ இருக்காது. அவர்களுடைய அடிப்படை உயிரியல்பு டென்ஷன் இல்லாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமேதான்.குழந்தைகள் இப்படியானவர்களே.எனவே, இயல்பாகவே அவர்கள் கடமைகளைத் தவிர்க்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இதற்கு அடுத்த நிலை ஈகோவை (Ego) நோக்கி நகரலாம். இது ‘குஷி’ படத்தில் சொல்வது போல் அகந்தை பிடித்த ஈகோ இல்லை. வளரும் பொழுது கல்வி, சூழ்நிலை மற்றும் பெற்றவர்களிடமிருந்து சமூகத்திடம் இருந்து கற்றுக் கொண்டு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும் இரண்டாம் நிலை. தான் யார்? சமூகம் எது? தான் எதில் வேறுபடுகிறோம் என்று பிரித்தறியக்கூடிய தன்மை இருக்கும். நன்மை /தீமை, உண்மை /கற்பனை எனத் தெளிவுகள் பிறக்கும். இப்படித் தனக்கென ஒரு நியாய அளவுகோல் கொண்டு, வாழ்வைச் சமநிலைப்படுத்திக் கொள்ளும் சுயம் இது.

மேனிலை சுயம் (Super Ego) எனும் மூன்றாம் நிலை கூடுதலான பக்குவம் கொண்டது. மகிழ்ச்சி என்பது மட்டுமே பிரதானமானது என்ற நிலையில் நிற்காமல் சீரிய இலக்குகளும், தனித்துவமான நல்ல கொள்கைகளுக்காகவும் இயங்கும் நிலை என்று வரையறுக்கப்படுகிறது. இவர்கள் சுயக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். தற்காலிக இச்சை விழைவுகளின் தாக்கம் அதிகம் இருக்காது. சமூகம் வரையறுத்த பண்புகளோடு, சுயமும் இருக்கும். இந்நிலைக்கு வந்து விட்டவர்கள். தன்னையும் கவனித்துக் கொண்டு, பிறருக்கும் பொறுப்புணர்வு வழங்கி சிறப்பாக செயல்களை நடத்தி வெற்றிநடை போடும் வல்லமை கொண்டவர்கள். மனிதன் இவ்வாறு படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர வேண்டும்.

ஆனால், சிலர் நடைமுறைப் பொறுப்புகளை மறந்து அப்படியே குழந்தை மனநிலையிலேயே தேங்கி விடுகிறார்கள். ‘பீட்டர்பன் சிண்ட்ரோம் ‘ (Peter Pan Syndrome) என்று தற்காலத்தில் உலகெங்கும் இது பேசப்படுகிறது. 1902 ஆம் ஆண்டு ஜெ. எம். பாரீ (J.M. Barrie) அவர்கள் எழுதிய பீட்டர் & வெண்டி என்ற புதினத்தில் அப்படியான குழந்தை மனநிலையைக் கொண்ட கதாபாத்திரத்தின் பெயரிது.

வயதுக்குரிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு மற்றவர்களை கவனித்துக் கொள்ளாமல், தான் இன்னமும் சிறு குழந்தை என்றெண்ணும் மனம் வளராத நிலையிது. பொறுப்புகள் தொடர்பான சிறு விவாதம், அறிவுரை என்றாலே காதுகளை மூடிக் கொண்டு கேட்கும் திறன்களை (Listening skills ) குறைத்துக் கொண்ட கடைநவீனத் தலைமுறை (Gen -z ). இதனை மறைமுக எச்சரிக்கைக் குறியீடாக விக்ரம் (2022) திரைப்படத்தின் ஒலிகளை உள்வாங்கி ஏற்கவே இயலாத பேரக்குழந்தையை எடுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில், இத்தலைமுறை அவர்களின் பொறுப்பின்மையைக் கண்டு பிறருக்கு வருகின்ற கோபத்தை சூழ்நிலையின் அமைதியைக் குலைக்கிறார்கள் என்று சித்தரிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலைப்பாடு அதிகரித்து வருவதால் ‘அமைதியை நோக்கி’ என்ற பெயரில் கடமைகளிலிருந்து விலகுதல் ஏற்படுகிறது. பொறுப்புணர்வோடு இருப்பவர்கள் குற்றவாளிகளாகப் பார்க்கப்படும் தலைகீழ் மாற்றம் வளரத் தொடங்கியுள்ளதை அவரவர் வீடுகளில் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இவர்களில் சிலர் உண்ணுவது, உடுத்துவது என்று எல்லாவற்றிற்குமே அடுத்தவரைச் சார்ந்து இருக்கிறார்கள். இவர்களின் மறுபக்கம் மிகவும் மென்மையாகவும் இருக்கிறது. ஏனெனில் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்த்து அடுத்தவரின் உறவை இயன்றவரை தக்க வைத்துக்கொள்ளும் மனஇயல்பு இருக்கும். இப்படியான சார்புநிலைப் பண்பு பாரம்பரியமாகவும், சூழ்நிலை காரணமாகவும் வருகிறது. சிறு வயதில் அதிகமாக கொடுக்கக்கூடிய செல்லம் (Glorifying parenting ) அல்லது அதீதக் கண்டிப்பு காரணமாகவும் இருக்கக்கூடும். சில பண்பாட்டு நம்பிக்கைகளின் திணிப்புகள் கண்மூடித்தனமாக குழந்தை அப்படித்தான் இருக்கும் அதற்கு என்ன தெரியும் நாமே செய்வோமே என்று பெரியவர்களையும் சொல்ல வைக்கிறது.

அதுவே அக்குழந்தை பெரிதாக உடலளவில் வளர்ந்தாலும்’’ இது ஒரு பெரிய விஷயம் இல்லை. மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டேத்தியாக இருக்க வித்திடுகிறது. தன் விழிப்புணர்வு குறைவாகி ((Low Consciousness ) எதையும் இலகுவாக ‘Take it easy ‘ பாலிசி என்று கிடக்க அது உடன் இருப்பவர்களின் தலைவலியாக உருப்பெருகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் பொருத்தமான பணியை பங்கிட்டுச் சரியாக வழங்குதல் மிக அவசியம்.

இதனை ஐயன் வள்ளுவர் அன்றே ‘‘இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய் அதனை அவன் கண் விடல்” என்று கூறி விட்டார். உன் வேலை என்று விட்டு விட வேண்டும் அப்போது தானாக நடக்கும் என்பதைக் குறிக்க ‘ விடல்’ என்ற சொல்லை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துல்லியமாகப் பொருத்தியதை எண்ணினால் வியப்பு மேலிடுகிறது இல்லையா?

The post அகமெனும் அட்சயப் பாத்திரம் appeared first on Dinakaran.

Tags : Agamemnon ,Kumkum ,Yasree Kannan ,
× RELATED அகமெனும் அட்சயப் பாத்திரம்