சென்னை: ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் கீழ்நிலை எழுத்தருக்கான எல்.டபிள்யூ.சி, சி.எம்.டி.டி தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு எழுதினர். தேர்வு எழுத வந்த அனைவரது ஹால் டிக்கெட்டை, தேர்வு நடத்தும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பர்வின் சர்மா (25) என்பவரது ஹால் டிக்கெட்டில் முரண்பாடு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் பர்வின் சர்மாவை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (21). இவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். பின்னர், மகேந்திர குமாருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து, பர்வின் சர்மா தேர்வு எழுதியதும், அவர் 12ம் வகுப்பு வரை படித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
விமானப்படையில் ஜூனியர் வாரன்ட் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சசிகுமார். இவர் நேற்று பர்வின் சர்மாவை முத்தாபுதுப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தார். விசாரணைக்கு பின் போலீசார் பர்வின் சர்மாவை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். மேலும், ஆள் மாறாட்டம் செய்ததில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விமானப்படை தேர்வில் ஆள் மாறாட்டம்: வட மாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.