×
Saravana Stores

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் காலமானார்

மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மீகச் சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்திரராஜன் மதுரையில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று காலை நடக்கிறது. மதுரையைச் சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன். ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டவர். சேலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர், மதுரையில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி ராதா, மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி உள்ளனர்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று இந்திரா சவுந்திரராஜன், நேற்று காலை வீட்டுக் குளியலறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதி வந்த இவர், புராணங்கள், இதிகாசங்களை கலந்து கதைகளில் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

அமானுஷ்யம், தெய்வீகம், மறுபிறவி மற்றும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான நாடகங்கள், 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். இவர் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படமான ‘சிருங்காரம் (2007)’ மூன்று தேசிய விருதுகளையும், இரண்டு, தமிழக அரசு விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனதுபயண அனுபவங்களை, யாத்திரை ஞானம், யாத்திரை அனுபவங்கள் என்ற பெயர்களில், நூல்களாக வெளியிட்டுள்ளார். அனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற கதைகள் தொலைக்காட்சி தொடர்களாக ஒளிபரப்பாகி இவருக்கு புகழ்பெற்று தந்தன. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று (நவ. 11) காலை 10.30 மணிக்கு மதுரை தத்தனேரி மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சவுந்திரராஜன் நூற்றுக்கணக்கான நூல்களை படைத்தவர்.

வரலாற்று காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து சுவாரசியமான முறையில் புதினங்களை புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சவுந்திரராஜன் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Indira Soundrarajan ,Madurai ,Salem ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனை கட்டிடங்களின்...