திருச்சி, நவ.10: 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து நவ. 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டில் `அறிவுப்பூங்கா’ என்ற தலைப்பில் ஓவியம் வரையும் போட்டி 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நவ.14ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஓவியப் போட்டிக்கு வரும் மாணவர்கள் கலர் பென்சில், கிரையான்ஸ் போன்ற பொருட்களை எடுத்து வரவேண்டும். ஓவியம் வரைய தாள்கள் நூலகத்தில் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஓரங்க நாடகப் போட்டி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவ.16 ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நூலகத்தில் நடைபெறும். போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும். நவ.16ம் தேதி மாலை 4 மணிக்கு இல்லற மேன்மைக்கு அதிக சவால்களை சந்திப்போர் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாத அரங்கு நடைபெறும். இதில் ஆண், பெண் வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.
நவ.17 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களுக்கு “படம் பார்த்து கதை எழுதும் போட்டி’’ காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் செயல்படும் பொது நூலகங்களில் நடைபெறும். போட்டி துவங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு துவங்குவதற்கு முன் படம் பார்வைக்கு வைக்கப்படும். படம் பார்வைக்கு வைக்கப்பட்ட நேரத்திலிருந்து 1 அரை மணி நேரத்திற்குள் வாசகர்கள் தம் கதையை பக்கத்திற்கு 20 வரிகளுக்கு குறையாமல் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஒப்படைக்க வேண்டும் போட்டியில் பங்கு கொள்பவர்கள் அருகாமையில் உள்ள பொது நூலகத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நவ.18ம் தேதி (திங்கட்கிழமை) திருச்சி மகளிர் சிறையில் இல்லவாசிகள் பங்குபெறும் ‘படித்ததை பகிர்வோம்\” என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். இல்ல வாசிகள் சிறையில் இயங்கும் நூலகத்தைப் பயன்படுத்தி தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து தமக்கு பிடித்த கருத்துக்களை எடுத்துரைப்பார்கள். நவ.19ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 11 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாபெரும் வினாடி வினா போட்டி நடைபெறும். இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வினாடி வினா நிகழ்ச்சியை என்.ஆர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் விஜயாலயன் நடத்தவுள்ளார்.
நவ.20 ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு “வாசிப்பு என்ன செய்யும்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதையை 5 நிமிடங்களுக்குள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவு விழாவில் வழங்கப்படும். அனைத்து நிகழ்வுகளிலும் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நுாலக அலுவலர் தெரிவித்துள்ளார்.
The post தேசிய நூலக வார விழாவையொட்டிமாணவர்களுக்கான கலைத்திறன் போட்டி appeared first on Dinakaran.