சென்னை: வீட்டு வசதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த வீட்டு வசதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அதிகளவில் பயனாளிகளை மாவட்டம் தோறும் சேர்க்க துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
The post வீட்டு வசதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்: அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவு appeared first on Dinakaran.