×
Saravana Stores

சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தேங்காய் சிரட்டை ‘கரி’ தயாரிக்கும் ஆலையை மூடுங்க

*கிராம மக்கள் வலியுறுத்தல்

குஜிலியம்பாறை : கொப்பரை தேங்காயில் இருந்து தேங்காய் பருப்பு பிரித்து எடுக்கப்பட்ட பின், தேங்காய் சிரட்டை மீதமாகிறது. இந்த தேங்காய் சிரட்டைகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி லாரிகளில் ஏற்றிக் கொண்டு, குஜிலியம்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.புதுக்கோட்டை காளகவுண்டன்பட்டி அருகே அய்யாமலை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திறந்தவெளியில் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி தயாரிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் ஆலைகள், தென்மண்டல பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறை ஒன்றியப் பகுதிகளை குறிவைத்து, ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.புதுக்கோட்டை காளகவுண்டன்பட்டி அருகே அய்யாமலை முருகன் கோவில் மேற்குப்புற பகுதியில் திறந்தவெளியில் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி தயாரிக்கின்றனர்.

தனியாருக்கு சொந்தமான நிலங்களை மாத வாடகைக்கு எடுத்து மக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி தயாரிக்கும் ஆலைகளை முறைகேடாக இயக்கி வருகின்றனர். தேங்காய் சிரட்டையை எரித்து அதிலிருந்து கிடைக்கும் கரியை பயன்படுத்தி ‘ஆக்டிவேட்டட் கார்பன்’ என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டைகளை, கெமிக்கலுடன் சேர்த்து எரித்து கரி தயாரிக்கப்படுதால் ஏற்படும் புகைமூட்டம், சுற்றுச் சூழலை மிகவும் பாதிக்கிறது. குழி தோண்டி, அதில் தேங்காய் சிரட்டைகளை போட்டு மூடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இத்தகைய கரி தயாரிக்கும் பணியால் சுற்றுப்பகுதி நிலங்களில் சாம்பல், கரித்தூள் படிந்து ஆடு, மாடுகளுக்கு தீவனம் கூட கிடைப்பதில்லை, என்றனர்.

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘எரிக்கப்பட்ட தேங்காய் சிரட்டையில் இருந்து கரியை வெளியே எடுக்க அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுவதால், கரித்தூள் கலந்த தண்ணீர் நிலத்துக்குள் செல்கிறது. அதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கூட தண்ணீர் மாசுபட்டுள்ளது. மேலும், தேங்காய் சிரட்டை எரிக்கப்படும் இடத்தின் அருகே வழிபாட்டுத்தலம் உள்ளதால், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டு தலத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுச்சுழலை மாசுப்படுத்தி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும், நீர்நிலைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படும் தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்தும், இனிவரும் காலங்களில் இது போன்ற ஆலைகள் இயங்காத வகையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தேங்காய் சிரட்டை ‘கரி’ தயாரிக்கும் ஆலையை மூடுங்க appeared first on Dinakaran.

Tags : Gujliampara ,Gujliampara Union ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை...