×

இளம்பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே காதல் திருமணம்

 

வேலூர், நவ.6: ஒடுகத்தூர் அருகே வரதட்சணை கேட்டு காதல் திருமணமான இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள திருமலைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(20). இவரும் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே உள்ள ஓட்டேரிபாளையத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஸ்வாவும் காதலித்துள்ளனர். பின்னர் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். விஸ்வா தற்போது வேலூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பின்பு விஸ்வாவின் அண்ணன் திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகளுக்கு 15 சவரன் நகை போடப்பட்டது. மேலும் மணமகனுக்கு ₹2 லட்சம் மதிப்பிலான பைக் கொடுக்கப்பட்டது. அதனால் விஸ்வா மற்றும் அவரின் பெற்றோர் அதேபோன்று 15 சவரன் நகை மற்றும் ₹2 லட்சம் மதிப்பிலான பைக் ஆகியவற்றை பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி ஐஸ்வர்யாவிடம் வற்புறுத்தி உள்ளனர்.

ஆனால் அவரின் பெற்றோர் அவற்றை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் விஸ்வாவின் பெற்றோர் நகை, பைக்கை வாங்கி விட்டு வீட்டிற்கு வரும்படியும், இல்லையென்றால் விஸ்வாவிற்கு வேறு ஒரு பெண்ணை 2 வதாக திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். இதற்கு விஸ்வாவும் உடந்தையாக இருந்துள்ளார். அதனால் பெற்றோர் வீட்டில் சில மாதங்கள் ஐஸ்வர்யா இருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த 3ம் தேதி விஸ்வாவின் வீட்டு முன்பாக ஐஸ்வர்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்னரும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. அதையடுத்து அவர் இதுதொடர்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா விசாரணை மேற்கொண்டு விஸ்வா, அவரின் பெற்றோர் திருப்பதி, பிரபாவதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே காதல் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Vellore ,Odugathur ,Aishwarya ,Tirumalaikuppam ,Ampur ,Tirupathur district ,
× RELATED கிணற்றில் செத்து மிதக்கும் வளர்ப்பு...