4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல், நவ.6: நாமக்கல் பகுதியில் அடுத்த 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிர்பார்க்கப் படுகிறது. இன்று(6ம் தேதி) ஒரு மி. மீட்டரும், 8ம் தேதி 6 மி. மீட்டர், 9ம் தேதி 9 மி. மீட்டர், 10ம் தேதி ஒரு மி. மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரி பாரான்ஹீட்டாகவும், இரவு வெப்பம், 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடக்கு மற்றும் வட கிழக்கில் இருந்து வீசும்.

அதன் வேகம் மணிக்கு 6 முதல் 8 கி.மீ., என்றளவில் இருக்கும். சூரிய வெளிச்சம் குறைவாக, மேக மூட்டத்துடன் வானிலை நிலவும்போது சோளம், கம்பு மற்றும் ஓட்ஸ் போன்ற தீவனப்பயிர்களில் நைட்ரேட் அதிகம் சேருகிறது. தீவனப் பயிர்களுக்கு நைட்ரஐன் சத்து அதிகம் உள்ள எரு மற்றும் உரம் போன்றவற்றை இடும்போதும், நைட்ரேட் அளவு தீவனப் பயிர்களில் அதிகரிக்கிறது. நைட்ரேட் நஞ்சை தடுக்கும் முறைகளாக, மேகமூட்டம் அதிகம் காணப்படும் மழை காலங்களில் தொழு உரம், மாட்டு கொட்டகை கழிவுநீர், யூரியா டி.ஏ.பி உரம் போன்றவைகளை தேவைக்கு அதிகமாக தீவனபயிர்களுக்கு இடுவதை தவிர்க்க வேண்டும். சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கொண்டு தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். வேர் மற்றும் தண்டு பகுதிகளில் நைட்ரேட் அதிகம் காணப்படுவதால், தண்டு பகுதியை தீவனமாக அளிப்பதை தவிர்க்கலாம்.

தற்போது கிடைக்கின்ற மழையை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள், புதிய மத்திய கால நெல் ரகங்களான கோ-52, கோ-56 மற்றும் ஆடுதுறை-55 போன்ற இரகங்களை தேர்வு செய்து, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்யலாம். புரட்டாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வயலில் வடிகால் வசதி ஏற்படுத்தி குமிழ் அழுகல் நோயை தவிர்க்க வேண்டும். மஞ்சள் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் நாட்களில் பெய்யும் மழையை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன், தலா 5 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தூரில் இடுவதால், கிழங்கு அழுகல் நோய் தாக்குதல் குறைந்து, பயிர் வளர்ச்சி மேம்படும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: